மோசமான நிலநடுக்கத்துக்கு உள்ளான ஆப்கானிஸ்தானில் நிவாரணப் பணிகளுக்குக் கைகொடுக்கும் வகையில், 50,000 அமெரிக்க டாலர் (S$68,000) உதவி வழங்குவதாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் உறுதியளித்துள்ளது.
கடந்த வாரம் சனிக்கிழமையன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆப்கானின் மேற்குப் பகுதியை உலுக்கியது.
இப்பேரிடரில் கிட்டத்தட்ட 2,445 பேர் மாண்டுவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டபகுதிகளில் இருக்கும் 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும் இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
மலைப் பகுதிகள் அதிகம் நிறைந்த அந்நாட்டில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்க நிதி திரட்டும் முயற்சி வரும் வாரத்தில் தொடங்கப்படும் என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் திங்கட்கிழமை தெரிவித்தது.
“ஆப்கானிஸ்தான் கடும் பொருளியல் நெருக்கடியில் இருக்கும் சூழலில் இந்தப் பேரிடர் ஏற்படுத்திய சேதத்தைச் சமாளிக்க அந்நாட்டுக்கு இந்த மனிதநேய உதவி தேவைப்படுகிறது,” என அச்சங்கம் குறிப்பிட்டது.
உள்கட்டமைப்பு மிகவும் மோசமாக உள்ள அந்நாட்டின் பாதிக்கப்பட்ட பகுதிக்குத் தேவைப்படும் உதவிகளைக் கொண்டு சேர்ப்பது மிகவும் சவாலான ஒன்று என அது மேலும் குறிப்பிட்டது.
ஆப்கான் செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிவதே இந்நடவடிக்கையின் நோக்கம் எனவும் திரட்டப்படும் நிதியைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது, தற்காலிக தங்குமிடங்களை அமைத்து தருவது, நிவாரணப் பொருள்கள் வழங்குவது போன்றவை மேற்கொள்ளப்படும் எனவும் அது தெரிவித்தது.


