இஸ்ரேல்- ஹமாஸ் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கைகொடுக்கும் வகையில், சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் சிங்கப்பூர் அரசாங்கமும் இணைந்து $505,000 நிதியுதவி வழங்குவதாகச் உறுதியளித்துள்ளன.
சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து அரசாங்கம் $300,000 நிதியுதவி அளிக்கும் என்று வெளியுறவு அமைச்சு திங்கட்கிழமை தெரிவித்தது. முன்னதாக செஞ்சிலுவைச் சங்கம் $205,000 நன்கொடை அளிக்க முன்வந்தது.
இந்த நிதி, தன் பங்காளிகளான பாலஸ்தீன செம்பிறைச் சங்கம், இஸ்ரேலில் உள்ள ‘மகேன் டேவிட் ஆடம்’ உள்ளிட்ட சங்கங்களுக்கும் அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம், அனைத்துலகச் செம்பிறைச் சங்கம் ஆகியவற்றில் உறுப்பினர்களாக உள்ள தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என அவ்வமைப்புகள் தெரிவித்தது.
நிவாரணம், மீட்புப் பணிகளுக்காகச் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் திங்கட்கிழமை முதல் பொதுமக்களிடம் நிதி திரட்டும் முயற்சிகளைத் தொடங்கும் எனவும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் இப்பணி நிறைவடையும் எனவும் கூறப்பட்டது.
இம்மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல்மீது ஹமாஸ் திடீரென வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேல்-ஹமாஸ் சண்டையில், குழந்தைகள் உட்பட 4,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் அப்பாவி மக்கள்.
“போரில் ஈடுபடாத பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும், அவசர உதவி தேவைப்படுவோர்க்கும், மருத்துவ வசதிகள், நீர், மின்சார வசதிகள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் நாங்கள் கடுமையாக முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இதன்மூலம் செஞ்சிலுவைச் சங்கத்தின் செம்பிறை இயக்கத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் உதவி தேவைப்படும் பொதுமக்களை அணுக முடியும்,” எனச் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுச் செயலாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பெஞ்சமின் வில்லியம் தெரிவித்தார்.
இந்தப் போரால், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் காஸாவைவிட்டு வெளியேறியுள்ளனர் என அச்சங்கம் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், அந்தப் பகுதி மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் உதவி தேவைப்படுவதாக திரு வில்லியம் கூறினார்.

