இலங்கைக்கு $50,000 நிதியோடு தொண்டூழியர்களையும் அனுப்பிய சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்

இலங்கைக்கு $50,000 நிதியோடு தொண்டூழியர்களையும் அனுப்பிய சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்

வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவி
படங்கள்: சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்

25 Jun 2024 - 1:38 pm

2 mins read

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் (எஸ்ஆர்சி) இலங்கையின் வெள்ள நிவாரணம், மீட்பு நடவடிக்கைகளுக்காக மனிதாபிமான உதவி வழங்கியதுடன் தொண்டூழியர்களையும் அனுப்பியுள்ளது.

உடனடி நிவாரணப் பணி களில் உதவுவதற்காக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் $50,000 நிதியை வழங்கியுள்ளது.

பாதுகாப்பான குடிநீர், உடனடி முதலுதவி, வெள்ளத்தால் வீடுகளை விட்டு வெளியேறிய குடும்பங்களுக்குத் தேவைப்படும் உணவு சாராப் பொருள்கள் போன்றவற்றை வழங்குதல் உடனடி நிவாரணப் பணிகளில் அடங்கும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் களுக்கு ஏற்பாடு செய்யவும் டெங்கிப் பாதிப்பை குறைக்கும் வகையில் வடிகால்களிலும் நிலப்பகுதிகளிலும் தேங்கியுள்ள நீரை வடித்தல் போன்ற துப்புரவு நடவடிக்கைகளுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத் தொண்டூழியர்கள் ஐவரைக் கொண்ட குழு ஜூன் 21ஆம் தேதி கொழும்பு நகரைச் சென்றடைந்தது. ஜூன் 27ஆம் தேதி வரை அந்தக் குழு நிவாரணப் பணிகளில் கைகொடுக்கும்.

சிங்கப்பூர்க் குழுவின் ஐவரில் நால்வர், வெளிநாடுகளில் பேரிடர் நிவாரணப் பணியில் ஈடுபடுவதற்கான பயிற்சி பெற்றவர்கள். ஐந்தாமவர் சங்கத்தின் ஊழியர்.

பாதிக்கப்பட்டோரின் தேவைகளை மதிப்பிடுதல், மனிதநேய நடவடிக்கைகளில் உதவுதல், மருத்துவ முகாம்களில் உதவுதல், இடம்பெயர்ந்தோருக்கு உணவு சாராப் பொருள்களை விநியோகித்தல் போன்றவற்றில் அவர்கள் கைகொடுப்பர்.

இலங்கைத் தலைநகர் கொழும்பின் நகர்ப்புற எல்லையில் ஜூன் 3ஆம் தேதி மழை வெள்ளத்தினூடே நடந்து செல்லும் மக்கள்.
இலங்கைத் தலைநகர் கொழும்பின் நகர்ப்புற எல்லையில் ஜூன் 3ஆம் தேதி மழை வெள்ளத்தினூடே நடந்து செல்லும் மக்கள். - படம்: ஏஎஃப்பி

டெங்கித் தடுப்பு நடவடிக்கைகளிலும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத் தொண்டூழியர்கள் கைகொடுப்பர்.

கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைத் துடைத்தொழிக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கண்காணிப்புப் பிரசாரங்களை அவர்கள் மேற்கொள்வர்.

இலங்கையின் பள்ளிகளிலும் இவ்வகை பிரசாரங்களை மேற்கொள்வது, தொண்டூழியர் களுக்கு டெங்கித் தடுப்புப் பயிற்சி வழங்குவது ஆகியவை குறித்துப் பணியாற்றவிருப்பதாக எஸ்ஆர்சி தெரிவித்தது.

மே மாத மத்தியிலிருந்து இலங்கையில் பருவமழைக்காலப் புயல்களால் கனமழை பெய்ததால் அங்கு வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டன. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டதாக எஸ்ஆர்சி கூறியது.

200,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் ஏறக்குறைய 5,000 பேர் நிவாரண நிலையங்களில் தங்கியிருப்பதாகவும் வெள்ளத்தால் 33 பேர் மாண்டுவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்செஞ்சிலுவைச் சங்கம்இலங்கைவெள்ளம்நிவாரணம்