சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கொலம்பியாவுக்கு $50,000 உதவி

சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கொலம்பியாவுக்கு $50,000 உதவி

வெனிசுவேலாவுக்கு மேலும் $50,000 ஆதரவு
படம்: ஏஎஃப்பி

13 Aug 2026 - 9:20 pm

1 mins read

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள கொலம்பியாவிற்கு ஆதரவளிக்க $50,000 மனிதநேய உதவியை வழங்கச் சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) உறுதிகூறியுள்ளது.

ஜூன் மாதம் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட வெனிசுவேலாவுக்கு மேலும் $50,000 உதவியை வழங்கப்போவதாகவும் அது தெரிவித்தது.

ஆகஸ்ட் 10ஆம் தேதி கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் முக்கிய நகரங்களில் உள்ள ஏராளமான கட்டடங்கள் கடுமையாகச் சேதமுற்றன. குறைந்தது 265 பேர் உயிரிழந்தனர்.

வியாழக்கிழமை நிலவரப்படி 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் 500க்கும் மேற்பட்டோரை இன்னும் காணவில்லை என்றும் அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.

கொலம்பியாவுக்கு வழங்கப்படும் $50,000 உதவியானது, கொலம்பியச் செஞ்சிலுவைச் சங்கம் உட்பட செஞ்சிலுவை, செம்பிறை இயக்கங்களின் மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் என்று சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இது பாதிக்கப்பட்டோருக்குத் தற்காலிக தங்குமிடம், உணவு, அத்தியாவசிய நிவாரணப் பொருள்களுடன் அவசரகாலச் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை வழங்குவதில் ஆதரவாகவும் அமையும்.

வெனிசுவேலா செஞ்சிலுவைச் சங்கத்தின் நிவாரண, மறுசீரமைப்புப் பணிகளுக்குக் கூடுதலாக $50,000 வழங்குவதாகவும் சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் உறுதியளித்தது. ஜூன் மாதம் அந்தத் தென்னமெரிக்க நாட்டிற்கு உறுதியளிக்கப்பட்ட $100,000 மனிதநேய உதவியுடன், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுவேலாவிற்கு வழங்கப்படும் இரண்டாம் கட்ட உதவி இது.

குறிப்புச் சொற்கள்