இளையர்கள் ரத்த தானம் அளிக்க ஊக்குவிக்கும் புதிய முயற்சி

இளையர்கள் ரத்த தானம் அளிக்க ஊக்குவிக்கும் புதிய முயற்சி

2 mins read
e219f418-82b7-4916-9cec-70ac74ce3153
மரினா பே சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு நிலையத்தில் ஜூன் 29ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட உலக ரத்த நன்கொடையாளர் தினத்தின்போது வழங்கப்பட்ட ரத்த தானம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 16 முதல் 25 வயதுடைய 500 இளையர்களை அடையும் இலக்குடன் புதிய திட்டம் ஒன்றைத் தொடங்கிவைத்துள்ளது.

தற்போதுள்ள ஒட்டுமொத்த ரத்த நன்கொடைத் திட்டத்தின்கீழ் இளம் ரத்த நன்கொடையாளர்கள் 15 விழுக்காட்டினர் ஆவர். இதை 2030ஆம் ஆண்டுக்குள் 25 விழுக்காடாக உயர்த்தும் நோக்கில் புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டு காலத்தில் இளம் ரத்த நன்கொடையாளர்களின் எண்ணிக்கை 2013ஆம் ஆண்டில் பதிவான 31 விழுக்காட்டிலிருந்து பாதியாகச் சரிந்துவிட்டது.

“நம் இளையர்களை ரத்த தானம் அளிப்பதில் துடிப்புடன் ஈடுபடுத்துவதன் அதி முக்கியத்துவத்தை, இளம் ரத்த நன்கொடையாளர் விகிதம் சரிந்துவரும் இந்தப் போக்கு அடிக்கோடிட்டு காட்டுகிறது,” என்றார் சுகாதார துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம்.

மரினா பே சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு நிலையத்தில் உலக ரத்த நன்கொடையாளர் தினம் தொடர்பாக ஜூன் 29ஆம் தேதி புதிய திட்டத்தை அவர் தொடங்கிவைத்தார்.

சிங்கப்பூரின் எதிர்கால ரத்த இருப்பு நீடித்து நிலைத்திருப்பதை உறுதிசெய்ய, இக்கால இளையர்களைத் துடிப்புடன் ஈடுபடுத்துவது இன்றியமையாதது என்றார் திருவாட்டி ரஹாயு.

செஞ்சிலுவைச் சங்கம் அதன் புதிய திட்டமான ‘யூத்இன்ஸ்பயர்ட்’ (YouthInspired) வழி இளையர்களுடன் நிகழ்ச்சிகள் மற்றும் இயக்கங்கள் வாயிலாகச் சென்றடைய முற்படும்.

இவற்றில் குறிப்பிடத்தக்க இயக்கமாக, 2024ஆம் ஆண்டின் பிற்பாதியில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் இளையர் ரத்த தான மாரத்தான் அமைந்திடும். இது 2022ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டபோது சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா ஆகியவற்றின் 14 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

இம்முறை மேலும் அதிக நாடுகளும் உயர்கல்விக் கழகங்களும் பங்கேற்கும் என்று தொடர்பு, தகவல் துணை அமைச்சராகவும் உள்ள திருவாட்டி ரஹாயு குறிப்பிட்டார்.

இதற்கிடையே, துரிதமாக மூப்படையும் சிங்கப்பூரின் மக்கள்தொகையுடன் ரத்தத்துக்கான தேவையும் அதிகரிக்கும் என்று சுட்டினார் திருவாட்டி ரஹாயு.

குறிப்புச் சொற்கள்