மலாய்-முஸ்லிம் சமூகத்தினருக்கு முக்கியத்துவம் தர பாட்டாளிக் கட்சியிடம் வலியுறுத்தினேன்: சமய போதகர் நூர்

2 mins read
பாட்டாளிக் கட்சி மலாய் முஸ்லிம் வேட்பாளர்களிடம் பேசியதாக இணையத்தில் பதிவு
f9a333ea-e100-443b-80d3-bfb88e27f51f
சிங்கப்பூரிலுள்ள மலாய், முஸ்லிம் சமூகம் குறித்த இஸ்லாமிய போதகர்களின் அக்கறைகளைக் கையாள பாட்டாளிக் கட்சி சம்மதித்தது என்று திரு நூர் டிரோஸ் கூறியதாகப் பெரித்தா ஹரியானின் கட்டுரை குறிப்பிட்டது.   - கோப்புப் படம்: பெரித்தா ஹரியான்

மலேசியாவில் செயல்பட்டுவரும் சிங்கப்பூர் சமயப் போதகர் ஒருவர், வரும் தேர்தலில் போட்டியிடும் பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களிடம் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிங்கப்பூரின் மலாய், முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளுக்கும் அக்கறைகளுக்கும் முன்னுரிமை கொடுக்க எதிர்க்கட்சிகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த மலாய் வேட்பாளர்கள் அனைவரிடமும் பேசியிருப்பதாகத் திரு நூர் டிரோஸ், தமது ஃபேஸ்புக் பதிவுகளில் கூறி வந்ததாக ‘பெரித்தா ஹரியான்’ மலாய் மொழி நாளிதழ், சனிக்கிழமை (ஏப்ரல் 24) செய்தி வெளியிட்டது.

சிங்கப்பூரிலுள்ள மலாய், முஸ்லிம் சமூகம் குறித்த இஸ்லாமிய போதகர்களின் அக்கறைகளைக் கையாள பாட்டாளிக் கட்சி சம்மதித்ததாகவும் திரு நூர் டிரோஸ் கூறியதாகப் பெரித்தா ஹரியான் கட்டுரை குறிப்பிட்டது.

சிங்கப்பூரில் இஸ்லாத்தின் பின்பற்றுதலுக்கான கட்டுப்பாட்டையும் விதிமுறைகளையும் சார்ந்த விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் குரலெழுப்பும்படியான தம் வேண்டுகோளைப் பாட்டாளிக் கட்சி முக்கியமாகக் கருதியது என்று நூர் கூறியதாக அச்செய்தி குறிப்பிட்டது.

முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தையும் முஸ்லிம் சட்ட நிர்வாகச் சட்டத்தையும் பற்றி திரு நூர் கூறியிருந்தார்.

தன்பாலின ஈர்ப்பு விவகாரங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுவதை நிராகரிப்பது, இஸ்ரேலுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது, பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிப்பது போன்ற கருத்துகளுக்கு ஆதரவளிக்க பாட்டாளிக் கட்சியையும் மற்ற கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்களையும் வலியுறுத்தி இருப்பதாகத் திரு நூர் கூறினார்.

மற்றொரு பதிவில், முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியை விமர்சித்த திரு நூர், மலாய், முஸ்லிம் உரிமைகளையும் விவகாரங்களையும் தற்காக்க அவர் தவறிவிட்டதாகவும் குறைகூறினார்.

பாட்டாளிக் கட்சியின் ஃபைசல் மனாப்புடன் திரு மசகோஸை மற்றொரு பதிவில் ஒப்பிட்ட திரு நூர், நாடாளுமன்றத்தில் திரு ஃபைசல் தரையங்கி விவகாரத்தை எழுப்பியதையும் சுட்டினார்.

சுகாதாரத் துறையில் முஸ்லிம் பெண்கள் தலையங்கி அணிவதில் உள்ள கட்டுப்பாடுகளை அரசாங்கம் 2021ல் தளர்த்தியதன் தொடர்பில் திரு நூர் அந்தக் கருத்தைப் பதிவிட்டார்.

திரு ஃபைசலுக்கு வாக்களிக்கும்படி திரு நூர் தம்மைப் பின்தொடர்பவர்களை, குறிப்பாகத் தெம்பனிஸ் குழுத்தொகுதியில் குடியிருப்பவர்களைக் கேட்டுக்கொண்டார்.

சர்ச்சைக்குரிய இன, சமயத் தொனி அடங்கிய சிங்கப்பூரர்களின் அண்மைய இணையப் பதிவுகளில் திரு நூரின் பதிவுகளும் அடங்கும்.

சிங்கப்பூரின் தேர்தல்களை வெளிநாட்டினர் வழிநடத்தவோ, நிதி அளிக்கவோ அல்லது எந்த விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தவோ கூடாது என்று உள்துறை அமைச்சும் தேர்தல் துறையும் வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 25) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்