ஹஜ்ஜுப் பயணத்திற்கு சிங்கப்பூரிலிருந்து அதிகமானோரை அனுமதிக்க கோரிக்கை

2 mins read
81379331-1798-4e2f-aeb7-fea1e57d08a8
சிங்கப்பூரின் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் டாக்டர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிமை வரவேற்றார் சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் அல்-ரபியா (வலது). - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

சிங்கப்பூரின் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் டாக்டர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம், சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் அல்-ரபியாவைச் சந்தித்து, ஹஜ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதில் தற்போது சிங்கப்பூருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 900 புனிதப் பயணிகளுக்குமேல் கூடுதல் ஹஜ் ஒதுக்கீட்டை அவர் கோரியுள்ளார்.

சிங்கப்பூர் புனிதப் பயணிகள் ஹஜ்ஜுப் புனிதப் பயணம் மேற்கொள்ளத் தகுதியானவர்களா என்பதை உறுதிப்படுத்த மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழைப் பெற வேண்டியிருப்பதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை சவூதி அதிகாரிகளால் விதிக்கப்பட்ட கடுமையான அளவுகோல்களுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“2026ஆம் ஆண்டு ஹஜ்ஜுப் பருவத்தின் தொடர்பில் சிங்கப்பூருக்கான ஹஜ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் அல்-ரபியாவைச் சந்திப்பதில் நான் பெருமைப்படுகிறேன்,” என்று திங்கட்கிழமை (நவம்பர் 10) ஒரு ஃபேஸ்புக் பதிவில் டாக்டர் ஃபைஷால் தெரிவித்தார்.

“இது வரவிருக்கும் பருவத்திற்கான சிங்கப்பூர் புனிதப் பயணிகளுக்கான ஹஜ் ஒதுக்கீட்டை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க தருணம்.

“சந்திப்பின்போது, ​​சிங்கப்பூருக்கு 900 புனிதப் பயணிகள் என்ற அதிகாரபூர்வ ஒதுக்கீட்டைத் தாண்டி, கூடுதல் ஹஜ் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்ற எங்கள் பணிவான விருப்பத்தையும் நான் தெரிவித்தேன். இதனால் எங்கள் புனிதப் பயணிகளில் அதிகமானோர் ஹஜ்ஜுப் பயணத்தை மேற்கொள்ள முடியும்,” என்று டாக்டர் ஃபைஷால் கூறினார்.

2026 ஹஜ்ஜுப் பருவத்திற்கான அதிகாரபூர்வ ஒதுக்கீடு முந்தைய ஆண்டுகளைப் போலவே 900 என்று உள்ளது.

உள்துறை மூத்த துணை அமைச்சருமான டாக்டர் ஃபைஷால், நவம்பர் 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சவூதி அரேபியா, ஜோர்தான் ஆகிய நாடுகளுக்குப் பணி நிமித்தப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

“கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் சிங்கப்பூருக்கான அதிகாரபூர்வ ஒதுக்கீட்டை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கை மற்றும் நட்பையும் பிரதிபலிக்கிறது,” என்று அமைச்சர் மேலும் கூறினார்.

“ஹஜ்ஜுப் புனிதப் பயணம் சுமுகமாகவும், பாதுகாப்பாகவும், ஆசீர்வாதங்கள் நிறைந்ததாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்கான இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறுதிப்பாட்டையும் இது பிரதிபலிக்கிறது,” என்று டாக்டர் ஃபைஷால் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்