வலுவான பொருளியல் செயல்திறன், ஆக்ககரமான வர்த்தக உணர்வுகளின் அடிப்படையில், சிங்கப்பூரின் தொழிலாளர் சந்தை 2024ல் தொடர்ந்து விரிவு கண்டது. என்றாலும், உலக நிச்சமயற்ற சூழலாலும் வர்த்தகப் பதற்றநிலையாலும் 2025ல் கூடுதல் இடர்களை அது சந்திக்கிறது.
வேலைச் சந்தைக்கு கூடுதல் சவால்கள் எழுவதற்கான அறிகுறிகள் 2024 கடைசிக் காலாண்டில் தென்பட்டன. காலாண்டு அடிப்படையில் ஆட்குறைப்பும் ஆண்டு அடிப்படையில் காலிப் பணியிட விகிதமும் சரிந்ததே இதற்குக் காரணம்.
2024 முழுவதுக்கும் வேலையில் இருந்த சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை 8,800 கூடியது. அதற்கு முந்திய ஆண்டில், பணியில் இருந்த சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை 4,600 குறைந்திருந்தது. மனிதவள அமைச்சு புதன்கிழமை (மார்ச் 19) வெளியிட்ட அதன் 2024 நான்காம் காலாண்டு வேலைச் சந்தை அறிக்கையில் இந்த விவரங்கள் தெரியவந்தன.
இங்குள்ள சிங்கப்பூர்வாசிகளில் பெரும்பான்மையாக சிங்கப்பூரர்கள் ஏறக்குறைய 85 விழுக்காடு பங்கு வகிக்கின்றனர்.
கூடுதலான சிங்கப்பூர்வாசிகளுக்கு வேலை கிடைத்தாலும், 2024 முழுவதும் தொழிலாளர் சந்தை மிதமடைந்தாலும், அது தொடர்ந்து இறுக்கமாக இருந்ததாக அமைச்சு கூறியது.
2024 டிசம்பரில் வேலையில்லாத ஒவ்வொரு நபருக்கும் 1.64 காலிப் பணியிடங்கள் இருந்தன. 2024 செப்டம்பரில் 1.32ஆக இருந்த விகிதத்தைவிட இது அதிகம் என்றாலும், 2023 டிசம்பரில் பதிவாகியிருந்த 1.76ஐவிட இது குறைவு.
2024 செப்டம்பரில் 61,500ஆக இருந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, 2024 டிசம்பரில் 77,500ஆக உயர்ந்தது.
காலிப் பணியிடங்களில் ஏறக்குறைய 70 விழுக்காடு அளவு சிங்கப்பூர்வாசிகள் செய்யும் வேலைகளுக்கானவை. நிதிப் பகுப்பாய்வாளர்கள், நிதி, முதலீட்டு ஆலோசகர்கள், மென்பொருள் வகுப்பாளர்கள், நிர்வாக ஆலோசகர்கள் உள்ளிட்டவை அத்தகைய வேலைகளில் அடங்கும் என மனிதவள அமைச்சின் மனிதவள ஆய்வு, புள்ளிவிவரத் துறை இயக்குநர் ஆங் பூன் ஹெங் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“அதிக ஆற்றலுடைய, அதிகச் சம்பளம் வழங்கும் வேலைகளை சிங்கப்பூர்வாசிகள் செய்வதை இது காட்டுகிறது,” எனச் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
2024ல் வேலையில் இருந்த வெளிநாட்டவர்களின் நிகர எண்ணிக்கை 35,700 அதிகரித்தது. 2023ல் பதிவாகியிருந்த வளர்ச்சியைவிட (83,500) இது பாதிக்கும் குறைவு.
பணியில் இருந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பில், வேலை அனுமதிச்சீட்டு வைத்திருப்போர் பெரும்பான்மை வகித்தனர். 2024ல் அவர்களின் எண்ணிக்கை 39,300 கூடியது.
சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் செய்வதற்கு வாய்ப்பு குறைவுள்ள பணிகளில் வேலை அனுமதிச்சீட்டு வைத்திருப்போர் சேர்ந்ததாக அமைச்சு சொன்னது.
இதற்கிடையே, எம்பிளாய்மண்ட் பாஸ், எஸ்-பாஸ் வைத்திருந்தோரின் எண்ணிக்கை 2024ல் இறக்கம் கண்டது. அதற்கு முந்திய ஈராண்டுகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருந்தது.
2024ல் சிங்கப்பூரில் மொத்த வேலை நியமனம் 44,500 கூடியது. ஒப்புநோக்க, 2023ல் இந்த எண்ணிக்கை 78,800ஆக இருந்தது.

