ஜூலை முதல் செப்டம்பர் வரை விலங்குப் பயண (சஃபாரி) பருவத்தின்போது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருக்கும் சிங்கப்பூர்வாசிகள் நாடு திரும்பும்போது தனிமைப்படுத்தப்படுவது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.
காங்கோ, புருண்டி, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, ருவாண்டா, உகாண்டா ஆகிய பகுதிகளில் கடுமையான குரங்கம்மைத் தொற்று பரவிவரும் நிலையிலும், அந்த இடங்களிலிருந்து வருவோருக்குத் தொற்று தொடர்பான அறிகுறிகள் இல்லையெனில், அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டியதில்லை என்று நோய்த்தொற்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
காய்ச்சல், தோல் அழற்சி, வீங்கிய நிணநீர்க் கணுக்கள் போன்றவை குரங்கம்மைத் தொற்றுக்கான அறிகுறிகளில் அடங்கும்.
அனைத்துப் பயணிகளும் எஸ்ஜி வருகை அட்டையில் குரங்கம்மை தொடர்பான அறிகுறிகளையும், பயண விவரங்களையும் குறிப்பிடவேண்டும் என்று சுகாதார அமைச்சு கூறியது.
உலகச் சுகாதார நிறுவனம் குரங்கம்மைத் தொற்றை உலகப் பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
“அது கொவிட்-19 கிருமியைப் போல சாதாரண சமூகத் தொடர்புகள் மூலம் பரவக்கூடியதாகத் தெரியவில்லை,” என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் டேல் ஃபிஷர் கூறினார்.
இந்தக் கட்டத்தில், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இங்கு வருவோர் குரங்கம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய ஒருவருடன் தொடர்பில் இருந்தால் ஒழிய, யாரையும் தனிமைப்படுத்துவதற்கான தேவை இல்லை என்றார் அவர்.
ஒன்றுக்கும் மேற்பட்ட, வெவ்வேறு நபர்களுடன் பாலியல் உறவு கொண்டிருப்பது போன்ற அதிக அபாயமுள்ள பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு, தொற்றால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் மிக அதிகம்.
தொடர்புடைய செய்திகள்
குரங்கம்மைத் தொற்று, காங்கோவிலும் அதன் அண்டை நாடுகளிலும் அதிகரித்து வருகிறது.
சென்ற ஆண்டு ஜனவரி முதல், கொங்கொவில் 27,000க்கும் அதிகமான சம்பவங்களும், 1,300க்கும் மேற்பட்ட மரணங்களும் பதிவாகி இருப்பதாக அமெரிக்க நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையங்கள் தெரிவித்தன.