மியன்மாருக்கு எதிரான அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சிங்கப்பூர் மதிக்கிறது: வெளியுறவு அமைச்சு

மியன்மாருக்கு எதிரான அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சிங்கப்பூர் மதிக்கிறது: வெளியுறவு அமைச்சு

படம்: ஏஎஃப்பி

24 Nov 2026 - 7:52 pm

2 mins read

இனப்படுகொலை உடன்படிக்கையின்கீழ் மியன்மாருக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தில் காம்பியா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சிங்கப்பூர் மதிப்பதாக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

2017ஆம் ஆண்டு மியன்மாரின் வடக்கு ரக்கைன் மாநிலத்தில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது மியன்மார் ராணுவம் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக அனைத்துலக நீதிமன்றம் நவம்பர் 19ஆம் தேதி தீர்ப்பளித்தது.

மியன்மாரில் நிலவும் பாதுகாப்பு, மனிதாபிமானச் சூழல் குறித்தும், குறிப்பாக ரோஹிங்யா மக்கள், அகதிகள், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் அவலநிலை குறித்தும் சிங்கப்பூர் ‘ஆழ்ந்த கவலை’ கொண்டுள்ளதாக அமைச்சு தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

‘அனைத்துலகச் சட்டத்தின்படியான ஆட்சி குறித்தும், மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பது குறித்தும்’ சிங்கப்பூரின் கடப்பாட்டை அது மறுவுறுதிப்படுத்தியது.

அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஏற்படக்கூடிய விளைவுகளை ஆய்வுசெய்து வருவதாகத் தெரிவித்த சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு, அகதிகள் பாதுகாப்பான, தன்னார்வ, கண்ணியமான முறையில் தாயகம் திரும்புவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்ற தனது நீண்டகாலக் கோரிக்கையை மீண்டும் முன்வைத்தது.

ஆசியான், பிற அனைத்துலகப் பங்காளிகளுடன் இணைந்து, புலம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமானத் தேவைகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க தயாராக இருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

மியன்மாரின் வடக்கு ரக்கைன் மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையில் குறைந்தது 10,000 ரோஹிங்யாக்கள் கொல்லப்பட்டனர். மேலும், முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 700,000க்கும் மேற்பட்டோர் பங்ளாதேஷிக்குத் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உச்ச நீதிமன்றமான அனைத்துலக நீதிமன்றத்தின் நவம்பர் 19ஆம் தேதி தீர்ப்பு, இனப்படுகொலைக்கு ஓர் அரசை பொறுப்பேற்கச் செய்தது இதுவே முதன்முறையாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்