சிங்கப்பூரில் பெருகும் உணவகங்கள்: வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் போட்டா போட்டி

2 mins read
908dbf30-9bd3-4e3a-a664-a3dfcec1493d
ஏபிஆர் குழும வர்த்தக வளர்ச்சி இயக்குநர் டியோ டோங் லூங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உணவகங்கள் பெருகி வருவதால் வாடிக்கையாளர்களை தன்பக்கம் ஈர்ப்பது எவ்வாறு என்பதில் பல உணவகங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.

“நமக்கு இருப்பது ஒரு வயிறுதான். ஆனால், சாப்பிடுவதற்கான உணவு, பானத் தெரிவுகள் சிங்கப்பூரில் ஏராளம் உள்ளன,” என்று பிரபலப் பொருளியல் நிபுணரான சோங் செங் வாங் விமர்சித்து உள்ளார்.

“2024ஆம் ஆண்டு பல உணவகங்கள் மூடப்பட்டன. ஆனாலும், மூடப்பட்டவற்றைக் காட்டிலும் புதிதாகத் திறக்கப்பட்ட உணவகங்களின் எண்ணிக்கை அதிகம்,” என்று குறிப்பிட்டுள்ளார் சிஜிஎஸ் இன்டர்நேஷனல் என்னும் நிதிச் சேவை நிறுவனத்தின் பொருளியல் ஆலோசகரான திரு சோங்.

புள்ளிவிவரத் துறையின் தரவுகளும் அதனையே உணர்த்துகின்றன. சிங்கப்பூரில் இவ்வாண்டின் முதல் 11 மாதங்களில் 1,204 உணவகங்கள் புதிதாகத் திறக்கப்பட்டன.

அதேநேரம், 856 உணவகங்கள் மூடப்பட்டன. ஒப்பீட்டுப் பார்க்கையில், 348 புதிய உணவகங்கள் தோன்றியுள்ளன.

இந்நிலையில், “உணவு, பானத் துறை போட்டி மிகுந்தது,” என்று கூறியுள்ளார் ஏபிஆர் ஹோல்டிங்ஸ் என்னும் உணவகக் குழுமத்தின் குழும வர்த்தக வளர்ச்சி இயக்குநரான டியோ டோங் லூங்.

சிங்கப்பூரில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக உணவு, பானத்துறையில் நீடிக்கும் ஏபிஆர், பல்வேறு பெயர்களில் கடைகளை நடத்தி வருகிறது.

ஸ்வென்சென்’ஸ் (Swensen’s) ஐஸ் கிரீம் கடைகளும் உணவகங்களும் அவற்றில் அடங்கும்.

உணவகங்கள் பெருகிய அளவுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்கிறார் திரு டியோ.

எனவே, வாடிக்கையாளர்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதில் பல்வேறு உணவகங்கள் போட்டிபோடுகின்றன.

தற்போதைய நிலையில், விலை மற்றும் சுகாதாரத்தின் மீது வாடிக்கையாளர்கள் கவனம் செலுத்துவதால் அந்தப் போட்டி அதிகமாக உள்ளது என்று அவர் தெரிவித்து உள்ளார்.

அத்தகைய வாடிக்கையாளர்களில் ஒருவரான சீ குன் செங், 35, பேரங்காடிக்குச் செல்லும் வேளைகளிலும் வருங்கால மனைவியுடன் செல்லும்போதும் மட்டும் வெளியில் சாப்பிடுவதாகக் கூறினார். அதன் மூலம் தமது செலவுகளைச் சிறப்பான முறையில் நிர்வகிக்க முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சோதனைக்கூட தொழில்நுட்பரான டலாஸ் கோ, 34, என்பவரும் அவரைப் போலவே கருத்துத் தெரிவித்து உள்ளார்.

செலவுகளைக் கட்டுப்படுத்த விரும்புவதால் உணவகங்களுக்குச் செல்வதில்லை என்றும் ஒருவேளை வெளியில் சாப்பிடும் நிலைமை தமது குடும்பத்துக்கு ஏற்பட்டால், மலிவான இடங்களை நோக்கிச் செல்கிறோம் என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்