சிங்கப்பூர் சில்லறை வர்த்தகம் எதிர்பாராத விதமாக 0.7% சரிவு

2 mins read
e251f1ee-7cf1-4d46-b234-fdacc92bee6e
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பேரங்காடிகளின் விற்பனை 2 விழுக்காடு அதிகரித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் சில்லறை வர்த்தகம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எதிர்பாராத விதமாக 0.7 விழுக்காடு சரிவு கண்டது.

அதற்கு முந்தைய மாதம் அது 2.4 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது.

இந்தத் தகவல்களைப் புள்ளிவிவரத்துறை ஜனவரி 3ஆம் தேதியன்று வெளியிட்டது.

சில்லறை வர்த்தகத்தின்கீழ் வரும் பிரிவுகளின் விற்பனை ஏற்ற இறக்கமாக இருந்தது.

அவற்றில் 50 விழுக்காடு மட்டுமே ஆண்டு அடிப்படையில் வளர்ச்சியைப் பதிவு செய்தன.

சில்லறை வர்த்தகம் சராசரியாக 1.5 விழுக்காடு ஏற்றம் காணும் என்று புளூம்பர்க் நடத்திய ஆய்வில் தனியார் துறை பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்திருந்தனர்.

மாத அடிப்படையில் சில்லறை வர்த்தகம் 2.8 விழுக்காடு குறைந்தது.

அக்டோபர் மாதத்தில் அது 0.3 விழுக்காடு அதிகரித்திருந்தது.

ஓராண்டுக்கும் முன்பு ஒப்பிடும்போது வாகன விற்பனையைக் கணக்கில் எடுக்காமல்,  நவம்பர் மாதத்தில் சில்லறை வர்த்தகம் 1.4 விழுக்காடு வீழ்ச்சி கண்டது.

அக்டோபர் மாதத்தில் அது 0.5 விழுக்காடு அதிகரித்திருந்தது.

நவம்பர் மாதச் சில்லறை வர்த்தக விற்பனையின் தோராய மதிப்பு $4.1 பில்லியன்.

இதில் இணையம் மூலம் விற்பனையின் பங்கு 14.6 விழுக்காடு.

அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 12.6 விழுக்காடு அதிகம்.

சிங்கல்ஸ் டே, பிளாக் ஃபிரைடே போன்ற விற்பனை நிகழ்வுகளின் காரணமாக இணையம் மூலம் விற்பனை அதிகரித்ததாகப் புள்ளிவிவரத்துறை கூறியது.

பேரங்காடிகள், உணவு மற்றும் மதுபானம், வாகனங்கள், அழகு சாதனங்கள், மரக்கலன்கள் மற்றும் வீட்டுப் பொருள்கள், பொழுதுபோக்கு தொடர்பான சாதனங்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் நகைகள் ஆகியவற்றின் விற்பனை நவம்பர் மாதம் உயர்ந்தது.

பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள், காலணிகள், மூக்குக்கண்ணாடி மற்றும் புத்தகங்கள் முதலியவற்றின் விற்பனை சரிந்தது.

குறிப்புச் சொற்கள்