சிங்கப்பூரில் கடந்த ஜூலை மாதம் மொத்த சில்லறை விற்பனை வருவாய் கூடியுள்ளது.
வாகன உரிமைச் சான்றிதழ் ஒதுக்கீட்டு எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக கார் விற்பனை கூடிய நிலையில், அந்த உயர்வு வந்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் ஓராண்டுக்கு முன்னர் அதே மாதத்துடன் ஒப்பிடுகையில் சில்லறை விற்பனை ஒரு விழுக்காடு கூடியது. சென்ற ஜூன் மாதம் அது 0.6 விழுக்காடு சரிந்திருந்தது.
புளூம்பெர்க் கருத்துக்கணிப்பு ஒன்றில் பொருளியல் நிபுணர்கள் கணித்த 1.3 விழுக்காட்டு அதிகரிப்புக்குக் குறைவாக விற்பனைகள் பதிவாயின.
அதோடு, மோட்டார் வாகன விற்பனையைத் தவிர்த்து, ஜூலையில் மொத்த சில்லறை விற்பனை 2.3 விழுக்காடு இறக்கம் கண்டது. அண்மையில் வாகனங்கள் வாங்கியோரால் சில்லறை விற்பனை கூடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
14 சில்லறை வர்த்தகப் பிரிவுகளில் ஒன்பது, கடந்த ஜூலையில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் விற்பனையில் சரிவைச் சந்தித்துள்ளதாக புள்ளிவிவரத் துறையின் தரவுகள் காட்டின.
பல்பொருள் அங்காடிக் கடைகளில் வருவாய் ஆக அதிகமாக, 11.2 விழுக்காடு குறைந்தது. ஆடைகள், காலணிகளுக்கான விற்பனை 10.3 விழுக்காடு சரிந்தது. கண்பார்வை பொருள்கள், புத்தகங்கள் ஆகியவற்றுக்கான விற்பனை 8.7 விழுக்காடு இறங்கியது.
ஒப்புநோக்க, மோட்டார் வாகனங்களின் விற்பனை 27.2 விழுக்காடு கூடியது. பெட்ரோல் நிலையங்கள், பேரங்காடிகள், உணவு, மதுபான, கைக்கடிகார, ஆபரண விற்பனைகள் ஆகியவற்றிலிருந்து கிடைத்த வருவாய் 0.8 விழுக்காட்டுக்கும் 4.7 விழுக்காட்டுக்கும் இடையே அதிகரித்தது.
தொடர்புடைய செய்திகள்
மொத்த சில்லறை விற்பனையின் மதிப்பு கடந்த ஜூலையில் $4 பில்லியன் என மதிப்பிடப்பட்டது. அதில் 11.9 விழுக்காடு இணையவழி விற்பனை என்று தெரிவிக்கப்பட்டது.

