உலகளாவிய விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறு, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் சிங்கப்பூரின் சாலைக் கட்டுமான நிறுவனங்கள் தாமதத்தை எதிர்நோக்கி வருவதாக சேனல் நியூஸ் ஏஷியா செய்தி வெளியிட்டுள்ளது.
விநியோகச் சிக்கல் காரணமாக, சாலைகளையும் விமான ஓடுபாதைகளையும் அமைக்கத் தேவையான ‘பிட்டுமென்’ பெட்ரோலியப் பொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.
அண்மை மாதங்களாகச் சாலைக் கட்டுமானப் பொருள்களின் விலை 60 விழுக்காடு வரை உயர்ந்துவிட்டதாக, சிஎன்ஏவிடம் பேசிய குத்தகையாளர்கள் சிலர் கூறினர்.
மேலும், விநியோகப் பற்றாக்குறையால் மாற்றுவழிகளைத் தேடும் நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாகச் சாலைக் கட்டுமானப் பணிகள் மாதக்கணக்கில் தாமதமடைவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் இடையூறுகளே அதற்குக் காரணம் என்கின்றனர் அவர்கள்.
அத்தகைய இடையூறுகள் ‘பிட்டுமென்’ உற்பத்திக்குத் தேவையான அதிக அடர்த்தி கொண்ட கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பாதிக்கின்றன என்றும் தொழில்துறை வல்லுநர்கள் சிஎன்ஏவிடம் கூறியுள்ளனர்.

