மாணவர்களின் கற்றலுக்கும் வளர்ச்சிக்கும் ஆதரவளிக்கும் நோக்கில், பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சமநிலையான முறையிலும் வயதுக்கேற்ற வகையிலும் பயன்படுத்தப்படுவதாகக் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியிருக்கிறார்.
தொடக்கப்பள்ளி மாணவர்களிடையே ‘ஏஐ’ பயன்பாடு குறித்தும் அதன் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் கேட்கப்பட்ட நாடாளுமன்றக் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அவர் அதனைத் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு ஏட்டுக்கல்வி மட்டும் போதாது என்றார் திரு லீ. கல்வி சார்ந்த செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், நன்கு வடிவமைக்கப்பட்ட, கண்காணிக்கப்பட்ட செயல்முறை அனுபவங்களும் அவர்களுக்குத் தேவைப்படுவதாக அவர் கூறினார்.
“இத்தகைய அணுகுமுறை, மாணவர்கள் பள்ளியின் பல்வேறு நிலைகளைக் கடந்து செல்லும்போது, செயற்கை நுண்ணறிவைத் தங்கள் கற்றலுக்குப் பயனளிக்கும் வகையில் கையாளவும் ‘ஏஐ’ வழங்கும் தகவல்களை ஆழமாக மதிப்பாய்வு செய்யவும் செயற்கை நுண்ணறிவைச் சார்ந்திருக்கும் ஆபத்துகளுக்கு எதிராகப் பாதுகாத்துக்கொள்ளவும் அவர்களைத் தயார்படுத்துகிறது,” என்று திரு லீ தெரிவித்தார்.
பிள்ளைகள் எவ்வாறு கற்றுக்கொள்கின்றனர், வளர்ச்சி காண்கின்றனர், அவர்களின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் உதவக்கூடிய அம்சங்கள் ஆகியவற்றின் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் கல்வி அமைச்சின் அணுகுமுறை அமைந்துள்ளதாகத் திரு லீ கூறினார்.
தொடக்கநிலை ஒன்று முதல் மூன்று வரை, மாணவர்கள் அடிப்படை அறிவாற்றல், அறிவுசார், சமூகத் திறன்கள் ஆகியவற்றை வளர்க்கும் வேளையில், செயல்முறைக் கற்றலுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
அவர்கள் செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்கின்றனர். ஆனால், செயற்கை நுண்ணறிவை நேரடியாகப் பயன்படுத்தவேண்டிய வேலைகளை அவர்களுக்குப் பள்ளிகள் வழங்காது என்றார் அவர்.
தொடக்கநிலை நான்காம் வகுப்புமுதல், ஆசிரியர்கள் கண்காணிப்பின்கீழ் மாணவர்கள் கல்விசார்ந்த ‘ஏஐ’ கருவிகளைப் பயன்படுத்தலாம். அந்த வயதில், மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு, ‘ஏஐ’ குறித்த அடிப்படை அறிவாற்றல் ஆகியவற்றைக் கொண்டிருப்பார்கள் என்றும் திரு லீ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அதோடு, திட்டமிடுதல், பணியைத் தொடங்குவதற்கான திறன், சொந்தச் சிந்தனைகளை மதிப்பீடு செய்யக்கூடிய ஆற்றல் ஆகியவற்றையும் அவர்கள் கொண்டிருப்பார்கள் என்றார் அவர்.
உண்மையான கற்றலுக்குப் பதிலாகக் குறுக்குவழிகளை எடுப்பதற்கு ‘ஏஐ’ பயன்படுத்தப்படக்கூடாது என்பது மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படும் என்றும் கூறினார் திரு லீ.

