சீனாவுடன் வலுவான ஒத்துழைப்பை நாடும் சிங்கப்பூர்

2 mins read
df60c5f5-9098-4a49-88c4-bc78a716ef80
10வது சிங்கப்பூர்-சீனா கருத்தரங்கின்போது சீனாவின் அமைச்சர்நிலை வாரியத்தின் உறுப்பினர் ஷி ஜுனும் (இடமிருந்து 2வது), சிங்கப்பூர் பொதுத் துறையின் நிரந்தரச் செயலாளர் டான் கீ கியாவ்வும் (வலமிருந்து 2வது) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். சீனாவின் மத்திய ஆட்சிக் குழுவின் நிர்வாக உதவி அமைச்சர் ஹுவாங் ஜியான்ஃபா (இடக்கோடி), பொதுச் சேவைகளின் ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங் உடன் உள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகில் தீவிரமான மாற்றங்கள் நிகழும் இந்தக் காலகட்டத்தில் பயணிக்க சிங்கப்பூரும் சீனாவும் ஒத்துழைப்பை மேம்படுத்தி, நம்பகமான தலைமையை வலுப்படுத்த வேண்டும் என்று சிங்கப்பூரைச் சேர்ந்த அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) தெரிவித்தனர்.

இருநாடுகளுக்கும் இடையிலான அரசதந்திர உறவுகளின் 35வது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெறும் 10வது சிங்கப்பூர்-சீன தலைமைத்துவ மன்றத்தில் பேசிய பொது சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங், தற்போதைய காலகட்டமானது புவிசார் அரசியல் போட்டி, விரைவான தொழில்நுட்ப சீர்குலைவு மற்றும் சமூகங்களின் பலவகை விருப்பங்களால் குறிக்கப்படுகிறது என்றார்.

இன்றைய உலகம், நாடுகள் எவ்வாறு ஆட்சி செய்கின்றன, வளர்கின்றன, ஒன்றாக வாழ்கின்றன என்பதை மாற்றியமைக்கும் சவால்களை எதிர்கொள்வதால் ஒரு திருப்புமுனையில் நிற்கிறது என்று திரு சான் குறிப்பிட்டார்.

“போக்குகளை வடிவமைக்கவும், வாய்ப்புகளைப் பயன்படுத்தவும், புதிய பாதைகளை உருவாக்கவும் நமது பங்காளித்துவத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும். புவிசார் அரசியல் போட்டியைத் தீவிரப்படுத்துதல், பல்லாண்டுகளாக உலகளாவிய ஒழுங்கை ஆதரித்து வரும் அமைப்புகள் மீதான நம்பிக்கை நெருக்கடி ஆகியவை சவால்களில் அடங்கும்,” என்றும் திரு சான் கூறினார்.

ஐக்கிய நாட்டு நிறுவனம், உலக வர்த்தக நிறுவனம் போன்ற அமைப்புகள் பயனற்றவை, காலாவதியானவை அல்லது பொருத்தமற்றவை என்ற முறையில் பார்க்கப்படுவதாகவும், மோதல்கள் ஐநா பாதுகாப்பு மன்றத்தைப் புறக்கணிப்பதாகவும், உலக வர்த்தக நிறுவனத்தைச் சுற்றி வர்த்தக மோதல்கள் இருப்பதாகவும் திரு சான் குறிப்பிட்டார்.

பொதுவான சவால்கள்

தொழில்நுட்ப மாற்றங்கள், மூப்படையும் சமூகம் போன்ற அழுத்தங்கள் குறித்து கருத்து தெரிவித்த தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, எதிர்பாராத மாற்றங்களுடன் கூடிய இந்தக் காலகட்டத்தில், சிங்கப்பூரும் சீனாவும் வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்வதிலும், தங்கள் குடிமக்களிடையே நம்பிக்கையைப் புதுப்பிப்பதிலும் பொதுவான சவால்களை எதிர்கொள்கின்றன என்றார்.

இரு நாடுகளின் கருவள விகிதமும் 2.1 என்ற மாற்றுநிலைக்கு மிகவும் குறைவாக உள்ளது. அது சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 0.97 ஆகவும், சீனாவில் கிட்டத்தட்ட 1.0 ஆகவும் உள்ளது. மேலும், அந்நாடுகளின் மக்கள்தொகை வேகமாக மூப்படைந்து வருவதையும் திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியோர் இப்போது மக்கள்தொகையில் 15 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளனர். அதே நேரத்தில் சீனாவின் மூப்படைந்த மக்கள்தொகை 2050ஆம் ஆண்டுக்குள் 30 விழுக்காட்டைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் வாழ்நாள் கற்றல் இயக்கமான ஸ்கில்ஸ்ஃபியூச்சர், நிறுவனங்கள் மின்னிலக்க வரைவுத்திட்டத்தை உருவாக்கவும் தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்தவும் உதவும் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் மின்னிலக்கத் தலைவர்கள் திட்டம் போன்றவரை அமைச்சர் டியோ சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில், சிங்கப்பூரின் பொதுச் சேவைத் துறையும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ஆட்சிக்குழு அமைப்பும் மூத்த அதிகாரிகளின் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

குறிப்புச் சொற்கள்