உலகப் பொருளியலுக்கு ஆசியான் முன்னெப்போதையும் விட மிகவும் பொருத்தமானதாகத் திகழ்கிறது என்றும் அதன் தொடர்ச்சியான வளர்ச்சி சிங்கப்பூருக்கு கணிசமான நன்மைகளைத் தரும் என்றும் துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற்ற 2024 ஆசியான் மாநாட்டில் உரையாற்றிய அவர், “அமெரிக்கா-சீனா வர்த்தகக் தகராறுகள், உக்ரேன், மத்திய கிழக்கு போர்கள், தைவான் நீரிணையில் பதற்றங்கள், அதிகரித்து வரும் பாதுகாப்புவாதம் ஆகியவற்றிற்கு மத்தியில் உலகம், முதலீட்டாளர்களுக்கு மிகவும் கடினமான இடமாக மாறியுள்ளது,” என்றும் கூறினார்.
“இவை அனைத்திற்கும் மத்தியில் ஆசியான் ஒரு பிரகாசமான இடம்; முன்னோக்கிச் செல்வதில் மென்மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
“ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதன் மூலம் இந்தச் சவால்களை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை உலகுக்குக் காண்பிக்க ஆசியான் நாடுகளுக்கு வாய்ப்பு உள்ளது,” என்று வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் கூறினார்.
10 ஆசியான் நாடுகளின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் US$3.6 டிரில்லியன் (S$4.68 டிரில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் பயன்பாடு, ஏற்றுமதியால் இயங்கும் உற்பத்தி, இளம் ஊழியரணி ஆகியவற்றின் காரணமாக, இது 2030ஆம் ஆண்டிற்குள் 4.5 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இது உலகின் நான்காவது பெரிய பொருளியலாக மாறும்.
அந்த மைல்கல்லை அடைவதற்கு, ஆசியான் தனது சொந்த பொருளியல் ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். நிலைத்தன்மை, மின்னிலக்கமயமாக்கலை ஊக்குவிக்க வேண்டும். மேலும் ஆசியான் அல்லாத பங்காளிகளுடன் வர்த்தகம், முதலீட்டு உறவுகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் துணைப் பிரதமர் விவரித்தார்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே எல்லை தாண்டிய பொருளியல் தொடர்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் ஆசியானின் பொருளியல் ஒருங்கிணைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு என திரு கான் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“உள்நாட்டில் எவ்வாறு ஒத்துழைப்பது, நமது மற்ற வர்த்தகப் பங்காளிகளுடன் ஆசியான் பிளஸ்-ஒன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்பதற்கு ஆசியான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
“உண்மையில், நமது நலன்களைப் பாதுகாப்பதற்கும், அதே நேரத்தில் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்புக்கான இடத்தை உருவாக்குவதற்கும் நாம் எவ்வாறு ஒன்றிணைவது என்பதை உலகிற்கு முன்னோக்கிச் செல்லும் வழியைக் காட்ட முடியும்,” என்றும் கூறினார் திரு கான்.
ஆசியான் நாடுகளின் தலைவிதி பல வழிகளில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. அவை வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களில் இருந்தாலும் என்ற துணைப் பிரதமர், “ஆசியான் நன்றாகச் செயல்படும் போது மட்டுமே சிங்கப்பூர் நன்றாக இருக்கும் என்று நான் எப்போதும் நம்பினேன்,” என்று தெரிவித்தார்.