தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கியப் புள்ளிக்குச் சிறை

2 mins read
cf5996db-c25b-49d2-9ad2-6f5c1f1bde09
சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் கடத்துவதை லியான் ஹோ ஹெங் ஒருங்கிணைத்ததாகவும் அதன்மூலம் பெறப்பட்ட பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. - படம்: இணையம்

மலேசியாவில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் 58 வயது சிங்கப்பூர் ஆடவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 28 ஆண்டுகள், ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

இது, சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஆகப் பெரிய கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்துடன் தொடர்பான வழக்கு என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் வர்ணித்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் டிசம்பர் 30ஆம் தேதியன்று தெரிவித்தது.

சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் கடத்துவதை லியான் ஹோ ஹெங் ஒருங்கிணைத்ததாகவும் அதன்மூலம் பெறப்பட்ட பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த $1.27 மில்லியன் தொகையை நல்ல பணமாக்கியதாகத் தெரியவந்துள்ளது.

சட்டவிரோத செயல் மூலம் பெறப்பட்ட, தமக்குச் சொந்தமான $203,000 தொகையையும் ‘காடி’ என்று அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான $1.07 மில்லியனையும் லியான் நல்ல பணமாக்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தம்மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை லியான் ஒப்புக்கொண்டார்.

அவற்றில் ஒன்று போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையது.

எஞ்சிய நான்கு குற்றச்சாட்டுகள் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றத்துடன் தொடர்புடையவை.

249.99 கிராம் ‘மெதம்ஃபெடமின்’ எனுப்படும் போதைப்பொருளை சிங்கப்பூருக்குள் கடத்த இன்னொரு சிங்கப்பூரரான டான் குவோஷெங்கை லியான் தூண்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.

கூடுதலாக 0.01 கிராம் போதைப்பொருள் கடத்தியிருந்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கக்கூடும்.

30 வயது டான் அந்தப் போதைப்பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து போதைப்பொருள் வாங்கியவர்.

அதுமட்டுமல்லாது, போதைப்பொருளைப் பெறவும் விநியோகிக்கவும் லியானுக்கு அவர் உதவினார்.

டான் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், டானை சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கைது செய்தது.

இதையடுத்து, லியான் பற்றி அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.

ஆனால் 2018ஆம் ஆண்டில் லியான் மலேசியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர் ஜோகூர் பாருவில் வசித்து ‘காடி’ என்பவரின்கீழ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் கூறினர்.

2023ஆம் ஆண்டில் அரச மலேசியக் காவல்துறையால் லியான் கைது செய்யப்பட்டார்.

2020ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அவர் சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் கடத்தும் குற்றத்தில் ஈடுபட்டார்.

நிதி நெருக்கடிநிலையால் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட லியான் தள்ளப்பட்டதாக அவரது வழக்கறிஞர் சூ சி சென் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

குறிப்புச் சொற்கள்