தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மீதான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இதனால், அவரைப் பதவியிலிருந்து நீக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால், அந்நாட்டில் தொடர்ந்து பேரளவில் ஆர்ப்பாட்டங்கள் நடக்க சாத்தியக்கூறுகள் இருப்பதால் அங்கு வசிக்கும் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களைத் தவிர்க்குமாறு சோலில் இருக்கும் சிங்கப்பூர்த் தூதரகம் அவர்களை அறிவுறுத்தியுள்ளது.
அந்நாட்டில் உள்ள சிங்கப்பூரர்கள் தென்கொரிய உள்ளூர் செய்திகளைக் கேட்டறிந்து, அதிகாரிகளின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறு அது கூறியது.
இதுதொடர்பாக தூதரகம் டிசம்பர் 7ஆம் தேதி இரவு வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், தென்கொரியாவில் உள்ள சிங்கப்பூரர்களைப் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும்படி வலியுறுத்தியது.
மேலும், “டிசம்பர் 3ஆம் தேதி இரவு தென்கொரிய அதிபர் யூன் ராணுவ ஆட்சிச் சட்டத்தை அறிவித்தார். இதனால், கோபமடைந்த அந்நாட்டு குடிமக்கள் போராட்டங்களில் இறங்கினர். அவரைப் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு தோல்வியடைந்தாலும், சியோலைச் சுற்றியுள்ள சில இடங்களில் போராட்டங்கள் தொடரக்கூடும்,” என்று தனது பதிவில் சிங்கப்பூர்த் தூதரகம் கூறியது.


