சிங்கப்பூரில் $60 மில்லியன் மதிப்பில் கடல்துறை ஆய்வு மையம்

சிங்கப்பூரில் $60 மில்லியன் மதிப்பில் கடல்துறை ஆய்வு மையம்

2 mins read
bdf95b02-db19-4dfc-81bf-f4e479acf8fb
2100ஆம் ஆண்டிற்குள் சிங்கப்பூரின் கடல் மட்டம் 1.15 மீட்டர் வரை உயரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. இது நிலம் மீட்பு மற்றும் பிற வழிகள் மூலம் கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தூண்டியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தேசிய பூங்காக் கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) ஆகியவற்றால் அமைக்கப்படவுள்ள புதிய $60 மில்லியன் மதிப்பிலான சிறப்பு ஆராய்ச்சி மையத்தின் மூலம், கொள்கை முடிவுகளுக்கு முக்கியமான கடல்துறை அறிவியல் ஆராய்ச்சி மேம்படும்.

வளர்ச்சி, பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்பு போன்றவற்றால் அதிகரிக்கும் சுற்றுச்சூழல் அழுத்தங்களுக்கு மத்தியில், சிங்கப்பூரின் கடல் மற்றும் கடலோர வளங்களை நிர்வகிப்பதற்கான ஒருங்கிணைந்த, அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையை இந்த மையம் சாத்தியமாக்கும் என்று உள்ளூர் நிலையங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஏப்ரல் மாதத்தில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.

2100ஆம் ஆண்டிற்குள் சிங்கப்பூரின் கடல் மட்டம் 1.15 மீட்டர் வரை உயரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. இது நிலம் மீட்பு மற்றும் பிற வழிகள் மூலம் கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தூண்டியுள்ளது.

2026ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின் போது அறிவிக்கப்பட்ட அந்த ஆராய்ச்சி மையம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படும். இது குறித்த கூடுதல் விவரங்கள் இவ்வாண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும்.

இந்த மையம் பல்கலைக்கழகங்கள், தொழில்துறை நிபுணர்கள், அரசாங்க அமைப்புகள் மற்றும் கொள்கை நிலையங்களை ஒன்றிணைக்கும் என்று தேசியப் பூங்காக் கழகத்தின் தேசியப் பல்லுயிர் மையக் குழுமத்தின் இயக்குநர் கேரன் டன் தெரிவித்தார்.

“கடல் அறிவியல் ஆராய்ச்சியை முன்னெடுத்துச் செல்ல, தற்போதுள்ள கடல்துறை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் உட்பட முக்கியப் பங்குதாரர்களிடையே இது ஓர் ஒருங்கிணைந்த உத்திபூர்வப் பார்வையை வழங்கும்,” என்று பவளப்பாறை உயிரியல் ஆய்வாளரான டாக்டர் டன் கூறினார்.

சிங்கப்பூரின் கடலோரப் பகுதிகளைத் தாண்டி, வெளிநாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களுடனான வட்டார ஒத்துழைப்பில் இந்த மையம் அதிக கவனம் செலுத்தவுள்ளது. இது தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் உள்ள கடல் ஆரோக்கியத்தின் ஒப்பீட்டு மதிப்பீடுகளையும் இந்த வட்டாரத்தின் இணைக்கப்பட்ட நீர்நிலைகள் பற்றிய கூட்டுப் புரிதலையும் எளிதாக்கும்.

குறிப்புச் சொற்கள்