சிங்கப்பூரில் கால்நடை மருத்துவ நிபுணர்களின் தரங்களையும் நடைமுறைகளையும் முறைப்படுத்துவதற்காக மன்றம் ஒன்று 2025ஆம் ஆண்டுக்குள் நிறுவப்படவுள்ளதாக தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் தெரிவித்துள்ளார்.
சன்டெக் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் கால்நடை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அந்த மன்றம், நிபுணத்துவ முறைகேடுகள் தொடர்பான சம்பவங்களை விசாரித்து ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் சொன்னார்.
கால்நடை மருத்துவ மன்றம் குறித்து பங்குதாரர்களுடன் பூங்காக் கழகம் தொடர்ந்து பேச்சு நடத்தும். தயாரானதும் கூடுதல் தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படும் என்று திரு டான் கூறினார்.
தேசிய பூங்காக் கழகத்தின் கீழ் நிபுணத்துவ அமைப்பாக அமையும் மன்றத்தின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக சட்டதிட்டங்களும் இருக்கும்.
அந்த மன்றம் அந்தத் துறையில் இருக்கும் 1,000 - 1,500 நிபுணர்களுக்கு ஆதரவு வழங்கப்படும். கால்நடை மருத்துவர்கள், கால்நடைத் தாதியர், தொழில்நுட்பர்கள் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.
மற்ற நிபுணத்துவ அமைப்புகளைப் போலவே, இதிலும் பொது, தனியார் துறைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள் என்று தேசிய பூங்காக் கழகம் கூறியது. அதே நேரத்தில், விலங்குகளின் சுகாதாரமும் நலனும் பாதுகாக்கப்படும் என்று கழகம் கூறியது.
சிங்கப்பூர் கால்நடை மருத்துவச் சங்கமும் தேசிய பூங்காக் கழகத்தின் விலங்குநல மருத்துவச் சேவையும் அந்தத் துறைக்கு நிபுணத்துவ அமைப்பு ஒன்று தேவைப்படுவது குறித்து ஆராய்ந்து வந்ததாக 2021ல் வெளியான அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. அந்தத் துறையில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்யவும் தரங்களை உயர்த்தவும் மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.


