அனைத்துலகக் கடல்சார் நடுவமாகத் திகழ்வதற்கு ஏதுவாக துறைமுகத்தின் போட்டித்தன்மைமிக்க திறனை வலுப்படுத்தல், கடல்சார் நிலையத்தின் ஈர்ப்புத்தன்மையை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய இலக்குகளுடன் சிங்கப்பூர்க் கடல்துறைப் பெருந்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் வடிவமைத்துவரும் இப்பெருந்திட்டம் குறித்த அறிவிப்பை, நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (மார்ச் 4) நடைபெற்ற அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு சார்ந்த விவாதத்தின்போது சட்டம், போக்குவரத்து அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை வெளியிட்டார்.
புத்தாக்கம், தொழில்நுட்ப மேம்பாடு, எதிர்காலத்திற்குத் தயாரான ஊழியரணி என இத்தொழில்துறை சார்ந்த வாய்ப்புகளை செழிப்புறச் செய்யும் இந்தப் பெருந்திட்டம், அத்தொழில்துறைக்கான வரைபடம் என்றார் திரு முரளி.
இதன் தொடர்பிலான பொதுவான இலக்கை வகுக்க வருங்காலங்களில் போக்குவரத்து அமைச்சும், ஆணையமும் முக்கிய வணிகத் தலைவர்களைக் கொண்ட உள்ளூர் தொழிற்குழுவை அமைக்கும். மேலும், அதுசார்ந்த கருத்துகளைத் திரட்டுவதில் தொழிற்சங்கங்களையும் பொதுமக்களையும் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் திரு முரளி கூறினார்.
2027ஆம் ஆண்டு வெளியீடு காணும் என்று அறிவிக்கப்பட்டுள்ள சிங்கப்பூர்க் கடல்துறைப் பெருந்திட்டம் அத்துறைக்கான நீண்டகால வணிகத் திட்டமிடல், முதலீடுகள், திறன்மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்றும் அவர் விளக்கினார்.
உலகளாவிய விநியோக அமைப்புகள் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிட்டாலும், சிங்கப்பூர்த் துறைமுகம் முக்கிய நடுவமாக தொடர்ந்து இணைந்திருப்பது அவசியம் எனக் குறிப்பிட்ட திரு முரளி, உலகத்துடனான சிங்கப்பூரின் தொடர்புவழியாகக் கடல் திகழ்கிறது என்றும் சொன்னார்.
இதற்கிடையே, கடல்துறைப் புத்தாக்கத்திற்கான அனைத்துலக நடுவமாகச் சிங்கப்பூரை நிலைநிறுத்த, கடல்துறைக் குழும நிதி - வணிக மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் புதிய புத்தாக்கத் திட்டத்தை ஆணையம் அறிமுகம் செய்யும் என்றும் திரு முரளி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், 2026 பிற்பாதியில் ஆளில்லா மேற்பரப்புக் கப்பல்களின் சோதனைகள் விரிவுபடுத்தப்படும் என்றும் மூத்த துணையமைச்சர் முரளி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
கடல்துறைப் பாதுகாப்பு ஆளில்லா மேற்பரப்புக் கப்பல்களில் தானியக்க செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயல்பாட்டுச் சோதனைகளை விரிவாக்கவும் ஆணையம் திட்டம் வைத்திருப்பதாகக் கூறிய அவர், பாதுகாப்புச் செயல்திறனையும் மீள்திறனையும் மேம்படுத்துவதே அதன் நோக்கம் எனச் சுட்டினார்.
இதற்கிடையே, விமானப் பயணத்திற்கான அதிகரித்துவரும் தேவையை ஈடுகட்டும் வகையில், சிங்கப்பூர் விமானத் துறை ஊழியரணியை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் சிங்கப்பூர்ப் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் (சிஏஏஸ்) மூன்று மனிதவளத் திட்டங்களை வகுக்கவுள்ளது.
இந்த அறிவிப்பை போக்குவரத்து, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் வெளியிட்டார். தொழில்முறைப் பயிற்சியுடன் இளங்கலைக் கல்வியை ஒருங்கிணைப்பதன்வழி, பட்டதாரிகள் தொழில்முறை உரிமங்களைப் பெறுவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்படும்.
பணியிடச் சூழலையும் அனுபவங்களையும் மேம்படுத்துவது, புதிதாகப் பணியில் சேர்வோரின் வாழ்க்கைத்தொழில் தகுதியை மேம்படுத்துவது ஆகியவற்றிற்கும் அவை ஆதரவளிக்கும் என்றும் திருவாட்டி சுன் விவரித்தார்.

