தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமானப் பாதுகாப்புத் தரவுகளை நான்கு ஆசியான் நாடுகளுடன் பகிரும் சிங்கப்பூர்

2 mins read
a42d0a13-5054-4cde-9a74-6853230914d7
கோப்புப்படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் உட்பட ஐந்து ஆசியான் நாடுகளின் விமானப் போக்குவரத்து அமைப்புகள், தங்கள் நாட்டு விமான நிலையங்கள், வான்வெளி, தேசிய விமான நிறுவனங்கள் ஆகியவை தொடர்புடைய பல்வேறு விமானச் சம்பவங்கள் குறித்த முக்கியமான பாதுகாப்புத் தரவுகளைப் பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.

பறவைகளால் தாக்கப்படுவது, விமானத்தில் ஆபத்தான பொருள்களை எடுத்துச்செல்வது, நடுவானில் ஏற்படும் திடீர் ஆட்டம், காற்றின் வேகத்தில் ஏற்படும் திடீர் மாற்றம் போன்ற தரவுகளைப் பகிர்ந்துகொள்ள அவர்கள் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

விமானப் பயணத்தின் பாதுகாப்பு குறித்து பயனீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய இவ்வாண்டு நடந்த பல விமான விபத்துகளால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இச்சம்பவங்களால் விமானப் போக்குவரத்து துறை ஆட்டம் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விமான நிறுவனங்கள், விமானம் மூலம் சேவை வழங்கும் நிறுவனங்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் அமைப்பு, விமானப் போக்குவரத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த அறிக்கையைச் சம்பந்தப்பட்ட நாட்டு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும் என சிங்கப்பூர் குடிமை விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

இருப்பினும், விபத்துகள் அல்லது அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கும் வரை இந்த அறிக்கைகள் மற்ற நாடுகளுடன் பகிரப்படமாட்டாது என்றும் அது கூறியது.

அனைத்துலக குடிமை விமானப் போக்குவரத்து ஆணையத்தின்படி, விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவது, பலர் பலத்த காயமடைவது, விமானம் சேதமாவது, கட்டமைப்பு செயலிழப்பு, விமானம் காணாமல் போவது, விமானத்தின் சமிக்ஞைகளை அணுக முடியாமல் இருப்பது ஆகியவையே விமான விபத்து எனக் கருதப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் விபத்து ஏற்படக்கூடிய அதிக வாய்ப்புள்ள சூழ்நிலைகளும் மிகவும் முதன்மையான ஒன்றாகும்.

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ்  ஆகிய ஐந்து ஆசியான் நாடுகளிடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் தொடக்கமாக ஏழு வகையான விமானச் சம்பவங்கள் பற்றிய தகவல்களை அந்நாடுகள் பகிர்ந்துகொள்ள இருக்கின்றன என ஆணையம் குறிப்பிட்டது.

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து இதுபோன்ற நடவடிக்கையில் இடம்பெறுவது இதுவே முதல்முறை.

சம்பந்தப்பட்ட நாடுகள் பாதுகாப்புத் தரவுகளையும் தகவல்களையும் பகிர்வது ஆபத்தை தடுக்கவும் அதை அடையாளம் காணவும் முடியும் என ஆணையம் சொன்னது.

அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டால், பகிரப்படும் விமானச் சம்பவங்களின் வகையை மாற்றலாம்.

இந்த உடன்படிக்கையில் கையெத்திட்டுள்ள அனைத்து நாடுகளும் ஒப்பந்தத்தைக் கைவிடும் வரை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அது புதுப்பிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்