தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சரக்கு ஏற்றியபோதே எரிபொருள் நிரப்பி சாதனை

2 mins read
fb0ce66f-b31e-419b-91d3-f624868940bc
கப்பலில் சரக்குகளை ஏற்றிக்கொண்டிருக்கும்போதே ‘பயோ மெத்தனால்’ எரிபொருள் நிரப்பப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் ‘எக்ஸ்பிரஸ் ஃபீடர்ஸ்’ கப்பல் நிறுவனம் கப்பல் துறையில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியாகத் தெரிவித்துள்ளது.

துறைமுகத்தில் கப்பல் சரக்குகளை ஏற்றிக்கொண்டிருக்கும்போதே ‘பயோ மெத்தனால்’ எரிபொருளை நிரப்பியுள்ளது அந்நிறுவனம். இவ்வாறு நடந்தது உலகிலேயே இதுதான் முதன்முறை என்று அது குறிப்பிட்டது.

மே 27ஆம் தேதி துவாஸ் துறைமுகத்தில் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையத்தின் முன்னிலையில் இது நடந்ததாக ‘எக்ஸ்பிரஸ் ஃபீடர்ஸ்’ தலைமை நிர்வாகி ஸ்மியூல் யாஸ்கோவிச் தெரிவித்துள்ளார்.

“சரக்குகளை ஏற்றும்போதே எரிபொருள் நிரப்புவது பல வழிகளில் உதவும். கிடைக்கும் கூடுதல் நேரத்தில் கப்பல் மெதுவாகச் செல்லலாம், அதன் மூலம் எரிபொருள் மிச்சமாகும். மேலும் அது செலவைக் குறைக்கும், காற்று தூய்மைக்கேட்டையும் கட்டுப்படுத்தும்,” என்றார் அவர்.

உலக அளவில் வெளியேற்றப்படும் கரியமில வாயுவில் 2.89 விழுக்காடு கப்பல் போக்குவரத்துமூலம் இடம்பெறுகிறது. இது விமான போக்குவரத்தால் ஏற்படும் அளவை விட அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்தப் புதிய அணுகுமுறை எங்கள் நிறுவனத்திற்கும் மட்டும் கிட்டிய வெற்றியன்று. அனைத்துலக கப்பல் போக்குவரத்திற்கு கிடைத்த வெற்றி என்றார் ‘எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ்’இன் தலைமை செயல்பாட்டு அதிகாரி பிரான்சிஸ் கோ.

பொதுவாக கப்பலில் பயன்படுத்தப்படும் எரிபொருள்களுடன் ‘பயோ மெத்தனால்’ எரிபொருளை ஒப்பிட்டால் அது கிட்டத்தட்ட 65 விழுக்காடு வரையிலான கரியமில வாயுவை குறைக்கும் என்றது ‘எக்ஸ்பிரஸ் ஃபீடர்ஸ்’.

கரியமில வாயுவைக் குறைக்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்த இலக்குகளை அடையும் நோக்கில் கடந்த ஆண்டு மேரெஸ்க் என்னும் டென்மார்க் நிறுவனம் அதன் கப்பல்களில் ஒன்றை ‘பயோ மெத்தனால்’ மூலம் செலுத்தியது.

‘எக்ஸ்பிரஸ் ஃபீடர்ஸ்’ கப்பல்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. அவை எப்போதும் பயன்படுத்தும் எரிபொருள் மூலமும் ‘பயோ மெத்தனால்’ மூலமும் செயல்படக்கூடியவை.

இரண்டு ரக எரிபொருள் மூலம் செலுத்தப்படும் 14 கப்பல்களை ‘எக்ஸ்பிரஸ் ஃபீடர்ஸ்’ நிறுவனம் அடுத்த ஆண்டுக்குள் வாங்கும் என்று தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்