தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கை விதித்த US$1 பி. அபராதத்தைச் செலுத்த சிங்கப்பூர் நிறுவனம் மறுப்பு

2 mins read
9097a38e-72c6-4cca-aacf-827cca26c929
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட கப்பல் 2021 ஜூன் மாதம் இலங்கைக் கடற்கரையோரம் தீப்பிடித்து எரிந்தது. - படம்: ஊடகம்

கடலில் மாசு ஏற்படுத்தியதற்காக இலங்கை அரசாங்கம் விதித்த US$1 பில்லியன் (S$1.3 பில்லியன்) அபராதத்தைச் செலுத்த சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட கப்பல் நிறுவனம் மறுத்துவிட்டது.

அபராதத்தைச் செலுத்துவது பல்வேறு விதமான தாக்கங்களையும் அபாயகரமான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்திவிடும் என்று ‘எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ்’ என்னும் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஷ்முவெல் யோஸ்கோவிட்ஜ் கூறியுள்ளார்.

அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ‘எம்வி எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ என்னும் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கொள்கலன் தாங்கிக் கப்பல் 2021 ஜூன் மாதம் சிங்கப்பூர் துறைமுகம் அருகே கடலுக்குள் மூழ்கியது.

கப்பலில் இருந்த நைட்ரிக் அமிலம் கசிந்ததால் தீபற்றியதாகவும் அதன் காரணமாக கப்பலில் இருந்த கொள்கலன்கள் அனைத்தும் கடலுக்குள் மூழ்கிவிட்டதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

அமிலங்கள், ஈயத்துண்டுகள், நூற்றுக்கணக்கான மெட்ரிக் டன் எடையுள்ள பிளாஸ்டிக் துகள்கள் போன்ற ஆபத்தான பொருள்கள் அடங்கிய 81 கொள்கலன்கள் உள்ளிட்ட சரக்குகள் அப்போது அந்தக் கப்பலில் இருந்தன.

நைட்ரிக் அமிலம் கசியத் தொடங்கியதும் அந்தக் கப்பலைக் கரையோரம் ஒதுக்க கத்தார் மற்றும் இந்தியத் துறைமுகங்கள் அனுமதி தரவில்லை.

பிறகு, ஒரு வழியாகக் கொழும்புவுக்கு அந்தக் கப்பல் சென்றது. அப்போது ஏற்பட்ட தீச்சம்பவத்தில் கப்பலில் இருந்த பல டன்கள் எடையுள்ள நுண்பிளாஸ்டிக் துகள்கள் 80 கிலோமீட்டர் தூர இலங்கையின் மேற்குக் கடற்கரை முழுவதும் சிதறின.

அது ஆகப்பெரிய சுற்றுச்சூழல் மாசுச் சம்பவமாக அது வகைப்படுத்தப்பட்டது. கடல்நீர் மாசுபட்டதால் அங்கு மீன்பிடிக்க பல மாதங்கள் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

அந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பு வழங்கிய இலங்கை உச்ச நீதிமன்றம், கடலில் ஏற்பட்ட இழப்புக்கு US$1 பில்லியன் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

அபராதத் தொகையின் முதல் தவணையான US$250 மில்லியனை செப்டம்பர் 23ஆம் தேதிக்குள் (இன்று) சிங்கப்பூர் கப்பல் நிறுவனம் செலுத்தவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

“அந்த அபராதத்தை நாங்கள் செலுத்த மாட்டோம். காரணம், வரம்புக்கு உட்பட்ட பொறுப்புகளின் அடிப்படையிலேயே இயங்கவேண்டும் என்பது கடல்துறை வர்த்தகத்தின் நியதி. இலங்கை அளித்துள்ள தீர்ப்பு அந்த நியதிக்கு முரணானது,” என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் திரு யோஸ்கோவிட்ஜ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்