தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செயற்கை போதைப்பொருள் குறித்து சிங்கப்பூர் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்

2 mins read
7690d6be-6d39-4337-88e4-905e3b9d3890
செயற்கை போதைப்பொருள் பெரும்பிரச்சினையாக உருவெடுக்கக்கூடும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஃபென்டனைல் போன்ற செயற்கை போதைப்பொருள்களின் ஆற்றல் பெரிய அளவில் அதிகரித்துள்ளதால் சட்டவிரோதமாக அவற்றைத் தயாரிப்போர் வேண்டுமென்றே அவற்றின் ஆற்றலைக் குறைப்பதாக பிரிட்டனைச் சேர்ந்த மூத்த செய்தியாளர் ஐயோவென் கிரில்லோ தெரிவித்துள்ளார்.

அத்தகைய போதைப்பொருள்களை உட்கொள்வோர் இறந்துபோவதைத் தவிர்க்க அவ்வாறு செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மெக்சிகோவின் போதைப்பொருள் நிலவரம் குறித்து இருபது ஆண்டுகளுக்கும் மேல் செய்தி வெளியிட்ட திரு கிரில்லோ, போதைப்பொருளுக்கு எதிரான ஆசிய பசிபிக் மாநாட்டில் பேச சிங்கப்பூர் வந்துள்ளார்.

வலிக்குப் பயன்படுத்தப்படும் ஃபென்டனைல் மருந்து சிங்கப்பூரில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அது மயக்க மருந்தான மோர்ஃபின்னைவிட 100 மடங்குக்கும் மேல் ஆற்றல் வாய்ந்ததாக மதிப்பிடப்படுகிறது.

அமெரிக்காவில் 2023ஆம் ஆண்டு 76,000 பேரும் 2024இல் 48,422 பேரும் ஃபென்டனைலுக்குப் பலியாயினர்.

மெக்சிகோவில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் இருந்த அனுபவத்தின் அடிப்படையில் பேசிய திரு கிரில்லோ, ஃபென்டனைல் போதைப்பொருளை உட்கொண்டதால் பலர் மாண்டது சட்டவிரோதமாகப் போதைப்பொருள் விற்போருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது என்றார்.

“அவர்களின் வாடிக்கையாளர்கள் இறந்துபோவதால் இதர போதைப்பொருள்களுடன் அவற்றைக் கலப்பதற்கான வழிகளைப் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஆராய்கின்றனர்,” என்று திரு கிரில்லோ குறிப்பிட்டார்.

20 ஆண்டுகளுக்குமுன் போதைப்பொருளுக்கு அடிமையானவருடன் உரையாட முடிந்தது என்ற திரு கிரில்லோ, செயற்கைப் போதைப்பொருள் உட்கொண்டோரிடம் இப்போது பேசும்போது அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது சிரமமாக உள்ளது என்றார்.

செயற்கை போதைப்பொருளை நோக்கிய புரட்சி ஆசியாவில் தலைதூக்கியுள்ளது என்றும் கஞ்சா போன்ற பாரம்பரிய தாவர வகையைச் சேர்ந்த போதைப்பொருளைவிட அது இன்னும் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என்றார்.

“ஆசியாவில் உள்ள மிகப் பெரிய பிரச்சினை மெத்தம்ஃபெட்டமைன் என்ற போதைப்பொருள். அது ஒருவகையான செயற்கை போதைப் பொருளாகும். பிலிப்பீன்ஸ், மலேசியா ஆகியவற்றில் பெரிய சந்தைகளை விநியோகிப்பாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சிங்கப்பூரில் அதுதான் மிகப் பெரிய பிரச்சினை,” என்று திரு கிரில்லோ குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஆக அதிகளவில் பயன்படுத்தப்பட்ட போதைப்பொருள் மெத்தம்ஃபெட்டமைன் என்று மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் தரவுகள் காட்டுகின்றன.

குறிப்புச் சொற்கள்