தென்கிழக்காசியக் கலைத்துறையின் நடுவமாகச் சிங்கப்பூர் திகழ வேண்டும்: அதிபர் தர்மன்

$20 மி. கலைத் திட்ட மானியம் ஜூலையில் தொடக்கம்

தென்கிழக்காசியக் கலைத்துறையின் நடுவமாகச் சிங்கப்பூர் திகழ வேண்டும்: அதிபர் தர்மன்

2 mins read
2c8aa8a7-f303-4c90-82df-d5001f6c83e3
சிங்கப்பூரில் பல கலாசாரங்களின் கலைகளுக்கான அடித்தளம் வலுவாக்கப்படுவதாக அதிபர் தர்மன் சண்முகரத்னம் செவ்வாய்க்கிழமை (மே 19) நடைபெற்ற ‘அனைத்துலக நிகழ்த்துகலைச் சங்கம் 2026’ மாநாட்டில் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர், வட்டாரக் கலைப் பரிமாற்றங்களுக்கான நடுவமாகத் திகழ வேண்டும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் சந்தித்து, பலவற்றை உணர்ந்து கலைப்படைப்புகளை உருவாக்கும் இடமாகச் சிங்கப்பூர் இருக்க வேண்டும் என்றார் அவர்.

வட்டாரத்தில் உள்ள பல்வேறு பாரம்பரியங்களும் ஒன்றுகூடுவதை அது ஊக்குவிக்கும் என்று அதிபர் தர்மன் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் சிங்டெல் நீர்முகப்பு அரங்கில், ‘அனைத்துலக நிகழ்த்துகலைச் சங்கம் 2026’ மாநாட்டில் அவர் பேசினார். 

சிங்கப்பூரில் பல கலாசாரங்களின் கலைகளுக்கான அடித்தளம் வலுவாக்கப்படுவதாக அதிபர் தர்மன் கூறினார்.

அதேநேரம், தென்கிழக்காசியாவிலும் அதற்கு அப்பாலும் கலைகளின்மூலம் புரிந்துணர்வுப் பாலங்களை உருவாக்கச் சிங்கப்பூர் முயலும் என்றார் அவர். கலைத் துறையில் வட்டார அளவில் புதிய பங்காளித்துவங்களுக்கான ஆதரவை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரு தர்மன் சொன்னார்.

அதன் காரணமாகவே கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதிய $20 மில்லியன் மதிப்புள்ள ‘பல கலாசாரக் கலைத் திட்ட மானியத்தை’ அறிவித்தது. அதற்கு அமைச்சுடன் அதிபர் சவால் அறநிதியும் கைகொடுக்கும்.

புதிய பல கலாசாரக் கலைத் திட்ட மானியம், இவ்வாண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி தொடங்கப்படும். 

பாரம்பரியக் கலைகளைக் கலைஞர்களும் அமைப்புகளும் முன்னெடுத்துச் செல்வதற்கு மானியம் ஆதரவு தரும்.

புதிய மானியத்திற்கு விண்ணப்பிக்குமாறு கலைஞர்களை அதிபர் தர்மன் ஊக்குவித்தார்.

மாநாட்டில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் கலைத்துறையைச் சேர்ந்த நானூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்களும் கலைஞர்களும் பங்கேற்றனர்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மாநாடு தென்கிழக்காசியாவிற்குத் திரும்பியிருப்பது சிங்கப்பூரின் கலைத்துறைக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

தேசிய கலைக் கழகம் மாநாட்டை நடத்துகிறது. மாநாட்டின் கருப்பொருள், “படைப்புகளின் சங்கமம்: ஒற்றுமையும் வேற்றுமையும்”.

சிங்கப்பூரில் கலாசார ஒருங்கிணைப்புப் பற்றி இங்குள்ள சிலரிடம் கருத்துக் கேட்டது தமிழ் முரசு.

அது காலங்காலமாகவே இருந்துவரும் ஒன்று என்றார் பாஸ்கர் கலைக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மீனாட்சி பாஸ்கர்.

“சிங்கப்பூரில் கலாசார ஒருங்கிணைப்பு என்பது நம்மிடையே இருக்கும் இயல்பான ஒன்று. பல கலைஞர்கள் சவால்களை எதிர்கொண்டு, கலைத் துறையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து உழைப்பதைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் அவர்.

தற்போதைய காலத்தில், கலைத்துறையில் செயற்கை நுண்ணறிவு எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும் என்பதுபற்றிக் கருத்துரைத்தார் லாசெல் கலைக் கல்லூரியின் தலைவர் வெங்கா புருஷோத்தமன்.

“செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு கருவி மட்டுமே; கலைதான் நம் சமூகத்தின் பிரதிபலிப்பு. கலைஞர்களுக்கு இன்றியமையாத விமர்சனச் சிந்தனையைச் செயற்கை நுண்ணறிவால் ஒருபோதும் உருவாக்க முடியாது,” என்று அவர் சொன்னார்.

செவ்வாய்க்கிழமை தொடங்கிய மாநாடு, வெள்ளிக்கிழமை (மே 22) வரை தொடரும்.

குறிப்புச் சொற்கள்