சிங்கப்பூரும் அதன் ஆசியான் கூட்டாளிகளும் பகுதி மின்கடத்திக்கான உத்திகளை நவீனப்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று அந்தத் துறையின் நிபுணரான திரு அஜித் மனோச்சா வலியுறுத்தி உள்ளார்.
பெரும்பாலான கணினிச் சில்லு உற்பத்தியாளர்கள் உலகளவில் தொடர்ந்து முதலீடு செய்ய உள்ள சூழலும் வர்த்தகத் தடைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் புத்தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாலும் நவீன உத்திகள் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.
‘செமி’ (Semi) என்னும் அனைத்துலக பகுதிமின்கடத்தி சங்கத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு மனோச்சா, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு சிறப்புப் பேட்டி அளித்தார்.
இவ்வாண்டுக்கான தென்கிழக்காசிய பகுதிமின்கடத்தி மாநாட்டை அந்தச் சங்கம் சிங்கப்பூரில் நடத்துகிறது. அந்த மாநாடு செவ்வாய்க்கிழமை (மே 20) தொடங்கியது.
உலகளவில் பரந்து விரிந்து தனித்து இயங்கக்கூடிய பகுதி மின்கடத்தித்துறையின் செயலாக்கச் சூழல் சவால் மிகுந்ததாக மாறிவிட்டது என்று கூறிய அவர், அதற்கு தற்போதைய வர்த்தகப் பதற்றங்களும் நிச்சயமற்ற கொள்கைகளும் காரணம் என்றார்.
இருப்பினும், தொழில்நுட்பத்திற்கும் பகுதிமின்கடத்தி சில்லுகளுக்குமான தேவை அதிகரிப்பதால், தற்போதைய இடையூறுகளைக் கடந்து புதிய வாய்ப்புகளைக் கண்டறிவதற்கான சிறந்த வழிகளைத் தேட வேண்டும் என்றும் திரு மனோச்சா தெரிவித்துள்ளார்.

