பொறியியல் நிபுணத்துவத்தை பயன்படுத்தி சிங்கப்பூரை போல அதே சவால்களை சந்திக்கும் மற்ற நாடுகளுக்கும் தீர்வு காண பயன்படுத்தலாம். இதன் மூலம் சிங்கப்பூர் எளிதில் கடந்து செல்லக்கூடிய நாடாக இல்லாமல் தொடர்ந்து தொடர்புடைய நாடாக இருக்கும்,” என்றார் தற்காப்பு அமைச்சரும் பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான சான் சுன் சிங்.
இதன்மூலம் சிங்கப்பூர் எளிதில் கடந்து செல்லக்கூடிய நாடாக இல்லாமல் தொடர்ந்து தொடர்புடைய நாடாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரின் பொறியாளர் கழகம் (Institute of Engineers) தனது 60வது ஆண்டு நிறைவை நோக்கிச் செல்வதை கொண்டாடும் வகையில் திங்கட்கிழமை (நவம்பர் 3) விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
‘ஃபேர்மோன்ட் சிங்கப்பூர்’ ஹோட்டலில் நடைபெற்ற அவ்விருந்து நிகழ்ச்சியில் அமைச்சர் சான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
எரிசக்தித் தேவை, அடுத்த தலைமுறைக்கு வாய்ப்புகளை ஏற்படுத்துதல், சிங்கப்பூர் காலத்திற்கேற்ப தொடர்புடையதாக இருப்பது ஆகிய மூன்று சவால்களை மையமாகக் கொண்டு பொறியியல் துறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சான்.
“பசுமை எரிசக்தியைப் பெறும் வழிகள் குறித்து பொறியாளர்கள் அனைவரும் கவனம் செலுத்தவேண்டும் என விரும்புகிறேன். நாம் எப்படிப் பசுமை எரிசக்தியை கவனமாக உற்பத்தி செய்கிறோம், திறம்பட விநியோகிக்கிறோம், விவேகத்துடன் பயன்படுத்துகிறோம் ஆகியவையே சிங்கப்பூர் அடுத்தடுத்து எட்டக்கூடிய உயரங்களை நிர்ணயிக்கும்,” என்றார் அமைச்சர் சான்.
சிங்கப்பூர் 500 சதுர கிலோமீட்டரிலிருந்து 700 சதுர கிலோமீட்டருக்கு விரிவாக்கம் கண்டுள்ளதை சுட்டிய அமைச்சர் சான், நிலம், காற்று, கடல், நிலத்தடி ஆகியவற்றைப் பயன்படுத்தி நமது முன்னோர்களைப் போலவே இன்னும் பெரிதான, அடுத்த தலைமுறையினருக்கு வாய்ப்புகள் நிறைந்த சிங்கப்பூரை உருவாக்குவதை குறிக்கோளாகக் கொள்ளவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
உலகளாவிய புவிசார் அரசியலின் தாக்கத்தினால் ஒரு பிளவுபட்ட உலகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று அடிக்கடி சொல்லப்பட்டுவரும் ஒன்று என்ற திரு சான், “நம்மிடம் உள்ள நிபுணத்துவத்தை மற்றவர்களால் எளிதில் கடந்து செல்ல முடியாத அளவிற்கு, சிங்கப்பூர் உலகளவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பொறியியல் துறை எவ்வாறு உதவும்?” என்ற கேள்வியை எழுப்பினார். .
தொடர்புடைய செய்திகள்
கொவிட்-19 கிருமித்தொற்று காலத்தை நினைவூட்டிய அமைச்சர் சான், அவசியமான பொருள்கள் தேவைப்பட்டபோது, பணம் மட்டும் இருந்தால் போதவில்லை என்பதை நினைவில் கொள்ளுவது முக்கியம் என்றார். அதற்குப் பதிலாக, உற்பத்தி செய்து பிறருடன் பரிமாற்றம் செய்யும் திறனே நமக்கு தேவையானவற்றைப் பெற உதவியது என்றார்.
இன்று, வேகம் புத்திசாலித்தனம் ஆகியவற்றின் அடிப்படையில் போட்டியிட நமக்கு தேவையான அனைத்தும் இருக்கிறது. மேலும், பிளவுபட்ட உலகத்தில், அந்த இடைவெளியைப் பாலமாக இணைத்து, வேகத்தையும் புதுமையையும் ஒருங்கிணைக்கக்கூடிய சூழல் எங்காவது இருந்தால், அது சிங்கப்பூராகவும் இருக்கவேண்டும் என்று தாம் நம்புவதாகக் கூறினார் திரு சான்.
அடுத்த தலைமுறையினரை பொறியியல் துறைக்கு ஈர்ப்பதன் சவாலை சுட்டிய திரு சான் அடுத்து வரும் தலைமுறையினர் ‘ஸ்ட்ராபெரி’ தலைமுறை போல அல்ல என்றார்.
இவர்களுக்கு பசியாலோ பயத்தாலோ உத்வேகம் பிறப்பதில்லை, மாறாக சாவல்களும் சிங்கப்பூருக்கும் உலகத்திற்கும் பங்களிப்பதே உத்வேகம் தருகின்றன என்றார் அமைச்சர் சான்.
இன்றைய உலகின் பெருஞ்சவால்கள், எதிர்காலத்திற்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தை, நாட்டை உருவாக்க விரும்புகிறோம் என்பன தொடர்பில் ஊக்கப்படுத்தினால், அவர்கள் பொறியியல் துறையில் சேர்வர் என அமைச்சர் சான் நம்பிக்கை தெரிவித்தார்.
விருந்து நிகழ்ச்சியில், சிங்கப்பூரின் முதல் நிறுவனச் செயலியான ஐஇஎஸ்60 செயலி அறிமுகம் கண்டது. உறுப்பினர் மேலாண்மை, தொடர் தொழில்முறை மேம்பாட்டுக் கண்காணிப்பு, பதிவுமுறை போன்ற வசதிகளுடனும் வாடிக்கையாளர் உறவு மேலாண்மை ஒருங்கிணைப்புடனும் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 60 ஆண்டுகளில் சிங்கப்பூரின் வளர்ச்சியை எடுத்துக்கூறும் பொறியியல் சாதனைகள் பதிவு செய்யப்பட்ட ஐஇஎஸ்-எஸ்ஜி60 நினைவுநூலும் வெளியீடு கண்டது.
சிங்கப்பூர் பொறியாளர் கழகத்திலும், நாட்டின் வளர்ச்சியிலும் பொறியாளர்களின் பங்களிப்பை தொடர்ந்து ஆதரித்ததற்காக, பிரதமர் அலுவலக மூத்த துணையமைச்சர் டெஸ்மண்ட் டான் அவர்களுக்கு ஐஇஎஸ் கௌரவ உறுப்பினர் பட்டம் (IES Honorary Fellow) வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் வகையில், விருதுகளும் உபகாரச் சம்பளங்களும் வழங்கப்பட்டன. இவை பொறியியல் துறையில் புத்தாக்கத்தை வளர்க்கவும் அடுத்த தலைமுறை பொறியாளர்களை வளர்க்கும் சிங்கப்பூரின் பொறியாளர் கழகத்தின் கட்ப்பாட்டை மறுவுறுதிபடுத்தும் நோக்கத்தில் அமைந்தன.
அவற்றில் ஒன்று முதல்முறையாகப் பல்கலைக்கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் ஆகியவற்றை சேர்ந்த ஆறு மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது.
அவர்களில் ஒருவர் தேசியப் பல்கலைக்கழகத்தில் மின்னியல் பொறியியல் இளநிலை பட்டக்கல்வி பயிலும் ஹன்சினி ப்ரிஷா, 20.

