பதின்ம வயதினரைப் பாதிக்கும் சமூக ஊடகங்களை சிங்கப்பூர் கையாள வேண்டும்: அமைச்சர் ஓங்

பதின்ம வயதினரைப் பாதிக்கும் சமூக ஊடகங்களை சிங்கப்பூர் கையாள வேண்டும்: அமைச்சர் ஓங்

2 mins read
82b5c120-cc25-4a73-9981-2f66e15b9aea
சீனாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அங்கு நடைபெற்ற கண்காட்சியைப் பார்வையிட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சுகாதார அமைச்சர் ஓங் யி காங், சமூக ஊடகத்தால் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் களைய சிங்கப்பூர் செயல்படவேண்டும் என்று கூறியுள்ளார். சமூக ஊடகங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

சீனாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட திரு ஓங், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) செய்தியாளர்களிடம் பேசினார்.

சமூக ஊடகங்களில் வரும் காணொளிகள், சமூக ஊடகக் கணக்குகள்வழி இளைய பயனீட்டாளர்களைப் பெரியவர்கள் நேரடியாகத் தொடர்புகொள்ள வகைசெய்யும் அம்சம் ஆகியவை பதின்ம வயதினரைப் பாதிக்கக்கூடும் என்றார் திரு ஓங்.

இளையர்களிடையே சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆராய சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது.

அந்தக் குழு அதன் ஆய்வறிக்கையை நிறைவுசெய்யும் நிலையில் இருப்பதாகச் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஓங் சொன்னார்.

சமூக ஊடகங்களில் வரும் காணொளிகளுக்குப் பதின்ம வயதினர் அடிமையாகக்கூடும் என்றும் அளவுக்கு அதிகமான நேரத்தைக் காணொளிகளில் அவர்கள் செலவிடக்கூடும் என்றும் நிபுணர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் நேரடித் தொடர்புக்கு வாய்ப்பிருப்பதால் இணையத் துன்புறுத்தல், தகாத உரையாடல்கள் ஆகியவற்றாலும் பதின்ம வயதினர் பாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

சிங்கப்பூர், சமூக ஊடகங்களுக்கு முழுமையான தடையை விதிப்பதற்குப் பதிலாக அத்தகைய அம்சங்களைச் சமாளிக்கும் அணுகுமுறை குறித்து யோசிக்கலாம் என்று திரு ஓங் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பாதிப்புகள் ஏற்படுத்தக்கூடிய அம்சங்களை ஆராய தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு தொழில்நுட்பத் தளங்களை அணுகவிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஒருசில நாடுகள், சமூக ஊடகங்களைப் பதின்ம வயதினர் பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளன.

அத்தகைய தடையை உலக அளவில் முதன்முறையாக விதித்தது ஆஸ்திரேலியா.

குறிப்புச் சொற்கள்
சமூக ஊடகம்சுகாதார அமைச்சுஇளையர்