சிங்கப்பூர் முழுவதும் புகைமூட்டம் காணப்படுகிறது. காற்றின் தரம் மோசமடைந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை (அக்டோபர் 3) காலை 11 மணியளவில் 24 மணிநேர காற்றுத் தரக் குறியீடு (பிஎஸ்ஐ) மத்திய வட்டாரத்தில் ஆரோக்கியமற்ற நிலையான 102ஐ எட்டியது.
பிற பகுதிகளில் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் பிஎஸ்ஐ குறியீடுகள் மிதமான வரம்புக்குட்பட்டு இருந்தாலும் அவையும் அதிகரித்துள்ளன.
காலை 6 மணி அளவில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்குப் பகுதிகளில் 73 முதல் 88 வரை இருந்த காற்றுத் தூய்மைக்கேடு குறியீடுகள், காலை 11 மணிக்கு 76 முதல் 94ஆக அதிகரித்தது.
உடனடி வெளிப்புற நடவடிக்கைகளுக்கான அளவீடாகப் பயன்படுத்தப்படும் பிஎம்2.5 குறியீடு, ஐந்தில் மூன்று பகுதிகளில் உயர்ந்து இருந்தது.
கிழக்கு, மேற்கு, மத்திய வட்டாரம் ஆகிய மூன்று பகுதிகளிலும் காற்றுத் தூய்மைக் கேடு முறையே 66, 57, 63 என்ற அளவில் பிஎம்2.5 பதிவானது.
24 மணிநேர பிஎஸ்ஐ குறியீடு 101 முதல் 200 என்ற வரம்பிற்குள் இருந்தாலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது. அதேவேளையில் மணிக்கு பிஎம்2.5 குறியீடு 56 முதல் 150 வரை இருப்பது நுண் துகள்கள் அதிகரித்துள்ளதைக் குறிக்கிறது.
