சிங்கப்பூரும் ஆறு நாடுகளும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகள், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அமெரிக்கா ஏற்பாடு செய்த முதல் ‘பேக்ஸ் சிலிக்கா’ உச்சநிலை மாநாட்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தப் பிரகடனத்தில் ஆஸ்திரேலியா, இஸ்ரேல், ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய இதர நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
முன்னேற்றகரமான வளப்பம், தொழில்நுட்ப முன்னேற்றம், பொருளியல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான நாடுகளின் கடப்பாடுகளை பிரகடனம் பிரதிபலிப்பதாக தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அந்த அமைச்சின் நிரந்தரச் செயலாளரான சங் காய் ஃபோங், அமெரிக்காவின் அழைப்பை ஏற்று வாஷிங்டனில் டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற உச்சநிலைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த மாநாட்டில் முக்கிய துறைகளுக்கான முதலீடுகள், ஒத்துழைப்புக் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு குறிப்பிட்டது.
மின்னிலக்கப் பொருளியலில் உருவாகி வரும் முக்கிய துறைகள் பற்றியும் பேசப்பட்டது.
மேலும், முன்னணி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சாத்தியமான புதிய வாய்ப்புகளும் கண்டறியப்படும். நாட்டின் மக்களுக்கு வர்த்தகங்களுக்கு பொருளியல்களுக்கு பயனளிக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தப் பிரகடனம் எதிர்காலத்தை நோக்கியதாகும். மேலும் ஏஐ போன்ற தொழில்நுட்பங்கள் பொது நலனுக்காகப் பயன்படுத்தப்படுவதற்கான முக்கிய பங்கையும், அனைத்துலக, தனியார் துறை இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது,” என்று பிரகடனம் கையெழுத்தான நிகழ்ச்சியில் திரு சங் தெரிவித்தார்.

