சின்னஞ்சிறு சிங்கப்பூர் சுறுசுறுப்பானது, பெருமதிப்புமிக்கது: பியூஷ் குப்தா

2 mins read
09bbfadd-ee28-490b-9be9-7b7de1744f8d
உரையாற்றிய பிறகு கலந்துரையாடலில் கலந்துகொண்ட திரு பியூஷ் குப்தா (வலது). அதை வழிநடத்தியவர் திரு சீசர் சிங் குப்தா. - படம்: அனுஷா செல்வமணி

சிங்கப்பூர் அதன் முற்போக்கு பார்வை கொண்ட ஆழமான தொழில்நுட்ப அடித்தளங்கள், நெருங்கிய பொது, தனியார் பங்காளித்துவங்கள், வலுவான புத்தாக்கம், தொழில்முனைப்பு மனப்பான்மையுடன் ஒரு புதிய நிதி ஒழுங்கை வடிவமைப்பதற்கு ஏதுவான இடத்தில் உள்ளதாக டிபிஎஸ் முன்னாள் தலைமை நிர்வாகி பியூஷ் குப்தா தெரிவித்தார்.

நாதன் கொள்கை ஆய்வுக் கழக விரிவுரைத் தொடரின் மூன்றாவது, இறுதிப் பகுதியாக திங்கட்கிழமை (டிசம்பர் 8) சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக வளாகத்தில் திரு குப்தா உரையாற்றினார்.

ஒரு புதிய நிதி அமைப்பிற்கான ஏவுதளமாக சிங்கப்பூர் இருக்கலாம் என்று தமது உரையில் வலியுறுத்திய அவர், சிங்கப்பூர் புத்தாக்கம், நம்பிக்கை ஆகியவற்றுக்கு இடையே ஒரு நுட்பமான, விவேகமான சமநிலையை வெற்றிகரமாக எட்டியுள்ளதாகவும் அது தனது திறனை விடத் தொடர்ந்து அதிகமாகச் சாதிக்க அனுமதித்துள்ளதாகவும் சொன்னார்.

“சிங்கப்பூர் துரிதமாகச் செயல்பட சிறியதாக இருந்தாலும் அது உலகின் மிகவும் நிலையான நாடுகளில் ஒன்றாகும். மிகவும் புத்தாக்கமிக்க நாடுகளில் ஒன்றாகவும் அது உள்ளது,” என்றார் திரு குப்தா.

சுற்றியுள்ள உலகில் புதிய வகையான பணப் புழக்கம், நிதித் துறைக்கு வரும் புதியவர்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவை களத்தில் இறங்கினாலும் சிங்கப்பூருக்கான வெற்றியின் அடித்தளங்கள் மாறாமல் இருக்கும் என்று குறிப்பிட்டார் திரு குப்தா.

சிங்கப்பூரின் தகவலமைப்புத் திறன், புதுமை மனப்பான்மை, ஆழமான சமூக நம்பிக்கை, பொது, தனியார் துறைகளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பை வளர்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

“செயற்கை நுண்ணறிவு, தரவு வில்லையாக்கம் (Tokenization) ஆகியவற்றால் நிலைநிறுத்தப்பட்ட, மிகவும் திறமையான, நெகிழ்வான, பாதுகாப்பான நிதிக் கட்டமைப்பால் ஆதரிக்கப்பட்ட ஓர் உலகத்தை சிங்கப்பூர் தொடங்கி வைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது,” என்று தெரிவித்தார் திரு குப்தா.

மின்னிலக்கச் சிங்கப்பூர் டாலரை அறிமுகப்படுத்துவது என்பது எதிர்காலத் தொழில்நுட்பங்களின் ஒரு முன்னணி உலகளாவிய நிதி மையமாகச் சிங்கப்பூரின் நற்பெயரை மேலும் நிலைநிறுத்தும் என்றார் திரு குப்தா.

பணம் செலுத்தும் உள்கட்டமைப்பைத் தாண்டி, சிங்கப்பூரின் மூலதனச் சந்தைகள், குறிப்பாக, அதன் பங்குச் சந்தைகளில் புரட்சியை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்