உலக நாடுகளின் வெப்பத்தை அதிகரிக்கும் எல் நினோ சிங்கப்பூரில் உள்ள ஒருசில உயிரினங்களுக்கு வரமாகவும் வேறுசில உயிரினங்களுக்குச் சாபமாகவும் அமைந்துள்ளது.
வெப்பமண்டல நாடான சிங்கப்பூரில் ஏற்கெனவே கொசுக்கள் மிக எளிதில் உற்பத்தியாகின்றன.
இருபது ஆண்டுகளுக்கு மேலான டெங்கிச் சம்பவங்களின் தரவுகள் அடிப்படையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் எல் நினோ பருவநிலை தலைதூக்கும்போதெல்லாம் டெங்கிக்கான அபாயமும் அதிகரிப்பதைக் காண முடிகிறது.
சிங்கப்பூரின் வெப்பநிலை கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் வேளையில், அதிகரிக்கும் வெப்பம் கொசுக்களின் உற்பத்தியை இன்னும் துரிதப்படுத்தக்கூடும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.
இவ்வாண்டின் எல் நினோவால் ஜூன் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை சிங்கப்பூரின் வெப்பமும் வறட்சியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொசுக்களைத் தவிர எல் நினோ வெப்பநிலையால் அதிகம் உற்பத்தியாகக்கூடிய மற்றோர் உயிரினம் கரப்பான்பூச்சிகள்.
குறிப்பாக, குப்பைத் தொட்டிகளில் வாழக்கூடிய அமெரிக்க, ஜெர்மன் ரக கரப்பான்பூச்சிகள் அதிக வெப்பத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்டவை என்று வல்லுநர்கள் கூறினர்.
மைனாக்கள், புறாக்கள் போன்ற பறவை இனங்களுக்கும் எல் நினோ பருவநிலை ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது என்றார் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மோவின் ஞானசேகரன்.
உணவங்காடி நிலையங்களிலும் உணவுகள் உள்ள இடங்களிலும் வாழும் புறாக்கள், காகங்கள், மைனாக்கள் ஆகியவை பெருகக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.
மாறாக, மஞ்சள் நிற புல்புல், செந்நிற மலர்கொத்தி போன்ற பறவைகள் அதிகம் இயற்கை உணவுகளை வனப்பகுதிகளில் உண்டு வாழ்வதால் எல் நினோ பருவநிலையால் அதிகரிக்கும் வெப்பநிலை அவற்றைப் பாதிக்கக்கூடும் என்று வனவிலங்கு நிபுணர்கள் தெரிவித்தனர்.
கம்பளிப்பூச்சி போன்ற சில பூச்சி வகைகள் குறைவாக உண்பதால் அளவில் சிறியதாகக்கூடும்.
நிலத்தில் வாழும் பூச்சிகள் அதிக வெப்பத்தால் இன்னும் ஆழமாக நிலத்துக்குள் செல்லக்கூடும். அதனால் சன்டே பங்கோலின் ரக எறும்புத்திண்ணி உணவு தேட சிரமப்படலாம்.


