தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காலாங்கிற்கு இடமாறும் சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி

2 mins read
1ff81634-2bb4-4ded-8d3b-76549d9470af
ஓவியரின் கண்ணோட்டத்தில், காலாங்கில் அமையவுள்ள ‘டீம் சிங்கப்பூர்’ அணியின் புதிய இல்லம். - படம்: ஸ்போர்ட் எஸ்ஜி

சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி, தற்போதுள்ள உட்லண்ட்ஸ் வட்டாரத்திலிருந்து காலாங்கிற்கு இடமாறும் எனப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் விளையாட்டுக் கலாசாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் முனையும் வேளையில், பிரதமர் வோங்கின் தேசிய தினப் பேரணி உரையில் இடம்பெற்ற பல்வேறு விளையாட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த இடமாற்றம் அமைகிறது. ‘உயிர்ப்புடன் காலாங்’ (Kallang Alive) பெருந்திட்டத்தின் ஓர் அங்கமாகவும் இந்த இடமாற்றம் அமைகிறது.

விளையாட்டுப் பள்ளியின் புதிய வளாகம், புதிய விளையாட்டு அறிவியல், விளையாட்டு மருத்துவ வசதிகள் மற்றும் பல முக்கிய விளையாட்டுகளுக்கான தேசிய பயிற்சி மையங்கள் வரிசையில் அமைந்திருக்கும்.

இந்த நடவடிக்கை, மாணவ விளையாட்டாளர்கள் மூத்த விளையாட்டாளர்களுடன் சேர்ந்து படித்து, பயிற்சி மேற்கொள்ள வழிவகுக்கும் எனப் பிரதமர் வோங் கூறினார்.

சிங்கப்பூரில் விளையாட்டுக் கலாசாரத்தை வலுப்படுத்தவும் தங்களது விளையாட்டுக் கனவுகளை நனவாக்குவதில் அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் ஆதரவளிக்கவும் அரசாங்க நோக்கத்தின் ஒரு பகுதியாக இத்திட்டங்கள் அமைகின்றன.

ஏப்ரலில் தனது 20வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி, $75 மில்லியன் செலவில் கட்டப்பட்டது. உட்லண்ட்ஸ் டிரைவில் அமைந்துள்ள ஏழு ஹெக்டர் நிலப்பரப்பளவிலான அப்பள்ளியில் இரண்டு ஒலிம்பிக் நீச்சல் குளங்கள், 700 பேர் அமரக்கூடிய உட்புற பல விளையாட்டு அரங்கு, பூப்பந்துப் பயிற்சி மையம், மேசைப்பந்து மையம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

காலாங் வலைப்பந்து, சுவர்ப்பந்து மையங்கள் தற்போது அமைந்துள்ள நிலப்பகுதியில் விளையாட்டுப் பள்ளியின் புதிய வளாகம் அமையும். 2026 வரை அண்மையில் குத்தகையை நீட்டித்துள்ள ‘வலைப்பந்து சிங்கப்பூர்’, 2030க்குள் தோ பாயோவுக்கு இடமாறவுள்ளது.

‘உயிர்ப்புடன் காலாங்’ பகுதியில் தற்போது காலாங் காற்பந்து நடுவம், காலாங் டென்னில் நடுவம், தேசிய விளையாட்டரங்கு, உள்ளரங்கு, ஓசிபிசி நீர்விளையாட்டு மையம் ஆகிய வசதிகள் உள்ளன.

புதிய உள்ளரங்கிற்கான திட்டங்கள் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், 18,000 பேர் அமரக்கூடிய வசதி அதில் இருக்கும் எனப் பிரதமர் வோங் தமது உரையில் கூறினார்.

குறிப்புச் சொற்கள்