மியன்மார், தாய்லாந்து இரு நாடுகளையும் வெள்ளிக்கிழமை (மார்ச் 28ஆம் தேதி) உலுக்கிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருடன் சிங்கப்பூர் ஒன்றுபட்டு இருக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
“நிலைமையை நாங்கள் அணுக்கமாக கண்காணித்து வருகிறோம். தேவைப்பட்டால் உதவி வழங்கத் தயார்,” என்று வெள்ளிக்கிழமை தமது ஃபேஸ்புக் பதிவில் அவர் தெரிவித்தார். அதில் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்து வாடுவோருக்கு அவர் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.
“ஆசியானின் வலிமை நெருக்கடி காலத்தில் ஒற்றுமையுடன் இருப்பதும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவளிப்பதில் கடப்பாடு கொண்டிருப்பதிலும் இருக்கிறது,” என்றும் அவர் கூறினார்.
நிலநடுக்கத்தில் சிங்கப்பூரர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தமது ஃபேஸ்புக்கில் தகவல் வெளியிட்டார்.
மியன்மாரிலும் தாய்லாந்திலும் இருப்பதாக மின்னிலக்க வாயிலாக பதிவு செய்திருக்கும் சிங்கப்பூரர்களுக்கு தேவையான அரசதந்திர உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
மேலும், மியன்மாருக்கு தற்போதைய நிலையில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.