சிங்கப்பூர் பங்குகளில் சில்லறை முதலீட்டாளர்கள் கடந்த ஆண்டு ஐந்தாண்டு காணாத அளவுக்குப் பணத்தைக் கொட்டியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளில் 2025ஆம் ஆண்டு முழுமைக்கும் $2.62 பில்லியனைச் சில்லறை முதலீட்டாளர்கள் முதலீடு செய்தனர்.
2020ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த அளவுக்கு பொதுமக்களிடமிருந்து முதலீடு வந்திருப்பது 2025ஆம் ஆண்டில்தான் என்று சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையின் (SGX) சந்தை உத்திபூர்வ நிபுணர் ஜியோஃப் ஹோவீ கூறியுள்ளார்.
2025ஆம் ஆண்டில் செய்யப்பட்ட முதலீட்டையும் சேர்த்தால், கடந்த ஆறு ஆண்டுகளில் சிங்கப்பூர் பங்குச் சந்தையில் சாதாரண முதலீட்டாளர்கள் $17 பில்லியனை முதலீடு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அதிகளவு அவர்கள் பங்கு வர்த்தகத்தில் கலந்துகொண்டனர். அந்த அரையாண்டில் $2.2 பில்லியன் பணம் சிங்கப்பூர் பங்குச் சந்தையில் கொட்டியது.
இரண்டாம் அரையாண்டில் வேகம் சற்று தணிந்து, $413 மில்லியன் முதலீடு செய்யப்பட்டது.
சில்லறை முதலீட்டாளர்கள் கடந்த ஆண்டு அதிகம் நாடியது டிபிஎஸ் வங்கியைத்தான்.
2025 ஏப்ரல் 2ஆம் தேதி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உலக நாடுகளுக்கான வரிவிதிப்பை அறிவித்தார். அன்று முதல் அடுத்த இரு வாரங்களில் டிபிஎஸ் வங்கியின் பங்குமீது முதலீடுகள் குவிந்தன.
தொடர்புடைய செய்திகள்
அந்த வங்கியில் ஆண்டு முழுவதும் செய்யப்பட்ட முதலீட்டில் கிட்டத்தட்ட பாதி அளவு அந்த இரு வாரங்களில் திரண்டது.
ஏப்ரல் மாத ஏற்ற இறக்கம் மற்றும் ஆண்டு முழுவதும் நீடித்த நிலையான வரவின்போது வங்கிகள் மீது முதலீட்டாளர்கள் அதிக நாட்டம் காட்டியதாக சிங்கப்பூர்ப் பங்குச் சந்தை கூறியது.
உள்ளூரில் வட்டி விகிதம் வீழ்ச்சியடைந்த நேரத்தில் வங்கிகள் வழங்கிய ஈவுத்தொகையும் அவர்களின் ஆர்வத்துக்கு ஒரு காரணம் என்றது அது.
சிங்கப்பூரின் மூன்று முன்னணி வங்கிகளான டிபிஎஸ், யுஓபி, ஓசிபிசி ஆகியவற்றில் அதிக முதலீடுகள் குவிந்தன. அவற்றை அடுத்து மேப்பிள்ட்ரீ இண்டஸ்ட்ரியல் டிரஸ்ட், கேப்பிட்டலேண்ட் இன்வெஸ்ட்மெண்ட், கம்ஃபர்ட்டெல்குரோ, ஜென்டிங் சிங்கப்பூர் ஆகியவற்றின் பங்குகளில் பொதுமக்கள் அதிகமாக முதலீடு செய்தனர்.

