சிங்கப்பூர்ப் பங்குச் சந்தை 2000ஆம் ஆண்டில் பொது வெளியீடு மூலம் பட்டியலிடப்பட்ட பரிவர்த்தனையாக மாறியதிலிருந்து அதன் ஆக வலுவான அரையாண்டுச் செயல்பாட்டைப் பதிவு செய்துள்ளது.
உள்ளூர்ச் சந்தையைப் புதுப்பிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவடையும் அரையாண்டில் நிகர லாபம் 0.8 விழுக்காடு அதிகரித்து $342.7ஆகப் பதிவானது எனச் சிங்கப்பூர் பங்குச் சந்தை வியாழக்கிழமை (பிப்ரவரி 5) கூறியது.
சரிசெய்யப்பட்ட லாபம் 11.6 விழுக்காடு உயர்ந்து $357.1ஆகப் பதிவானது.
அரையாண்டுக்கான வருவாய் 7.9 விழுக்காடு அதிகரித்து $736.2 மில்லியனாகப் பதிவானது.
இதற்கு ஓராண்டுக்கு முன்பு, அதே காலகட்டத்தில் $682.2 மில்லியன் வருவாய் ஈட்டப்பட்டது.
“பங்குகள், தங்கம் போன்ற பல்வகைச் சொத்துகளில் ஒரே நேரத்தில் முதலீடு செய்யும் உத்தியைக் கொண்ட எங்களது வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்துள்ளது. இதுவே ஆக வலுவான அரையாண்டுச் செயல்பாட்டுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
“சவால்மிக்க உலகளாவிய சூழலில், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைப் பல்வகைப்படுத்தி, வரக்கூடிய அபாயங்களைச் சமாளிக்க எங்களது நம்பகமான தளத்தின் மீள்திறன் கைகொடுத்தது,” என்று சிங்கப்பூர்ப் பங்குச் சந்தைக் குழுமத்தின் தலைமை நிர்வாகி லோ பூன் சாய் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
6 விழுக்காட்டுக்கும் 8 விழுக்காட்டுக்கும் இடையிலான இடைக்கால வருவாய் ஈட்டுவதில் சிங்கப்பூர்ப் பங்குச் சந்தை நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் கூறினார்.
இடைக்காலக் காலாண்டு ஈவுத்தொகையாக ஒவ்வொரு பங்கிற்கும் 11 விழுக்காடு வழங்கப்படும் என்றும் அது பிப்ரவரி 24ஆம் தேதியன்று வழங்கப்படும் என்றும் சிங்கப்பூர்ப் பங்குச் சந்தை அறிவித்தது.

