கடந்த ஒரு மாதத்தில் சிங்கப்பூர்ப் பங்குச்சந்தை உலகளவில் மிகச் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.
அதிக ஈவு, உறுதியான நிதிநிலை போன்றவற்றுடன் சாதகமான பொருளியல் சூழலும் இணைந்துள்ளதே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
தொழில்நுட்ப ஏற்றுமதியால் உந்தப்பட்ட வலுவான வளர்ச்சியும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் உற்பத்தித்திறன் மேம்பாடும் நிறுவனங்களின் வருவாயை உயர்த்தியுள்ளன.
சிங்கப்பூர் பங்குச்சந்தை தொடர்ந்து ஐந்தாம் காலாண்டாக ஏற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத நீடித்த உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய மோதல்களில் இருந்தும் செயற்கை நுண்ணறிவு வணிகத்தின் ஏற்ற இறக்கங்களிலிருந்தும் பாதுகாப்பான புகலிடத்தைத் தேடும் நிறுவன முதலீட்டாளர்களை சிங்கப்பூரின் வளர்ச்சியும் நிலைத்தன்மையும் கவர்ந்துள்ளது.
நாட்டின் முதன்மைப் பங்குச் சந்தைக் குறியீடு இவ்வாண்டில் 23 விழுக்காடு உயர்ந்து, புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது. இந்த ஏற்றம் மேலும் தொடரும் என நிதி மேலாளர்கள் கருதுகின்றனர்.
நாட்டின் விரிவடையும் பொருளியலும் வலுவடையும் நாணயமும் பங்குச்சந்தையின் உயர்வுக்குத் துணையாக இருக்கும் என ஜூபிட்டர் அசெட் மேனேஜ்மென்ட் தெரிவித்துள்ளது. அதேவேளையில், சொத்து நிர்வாகம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த உள்கட்டமைப்பு போன்ற காரணிகள் மூலதன ஈர்ப்பை அதிகரிப்பதாக ஈஸ்ட்ஸ்பிரிங் இன்வெஸ்ட்மென்ட்ஸ் குறிப்பிட்டுள்ளது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீட்டின் (எஸ்டிஐ) உயர்வுக்கு டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி ஆகிய மூன்று பெரிய வங்கிகளே முக்கியக் காரணம் என புளூம்பெர்க் செய்தி குறிப்பிட்டுள்ளது.
அவை தங்களின் மிக அதிகபட்ச பங்கு விலையை எட்டியுள்ளன. ஓசிபிசி பங்குகள் இவ்வாண்டில் 61 விழுக்காடு விலையுயர்ந்து, சிறந்த செயல்திறனைப் பதிவுசெய்துள்ளன.
அத்துடன், உலகளாவிய வட்டி விகிதங்களும் ஏறுமுகத்தில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிதி நிறுவனங்களுக்கு வலிமை சேர்த்துள்ளது. இதனிடையே, கடந்த மூன்றாண்டுகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பும் கிட்டத்தட்ட ஆறு விழுக்காடு கூடியுள்ளது.
ஜேபிமோர்கன் நிறுவனம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீட்டின் இலக்கை 6,500 புள்ளிகளாக உயர்த்தியுள்ளது. அதேவேளையில், பங்குகளின் விலைகள் அவற்றின் வருமான வளர்ச்சியைக் காட்டிலும் அதிகமாக உயர்ந்துள்ளதால் ஃபிடலிட்டி இன்டர்நேஷனல் நிறுவனம் எச்சரிக்கையுடன் அணுகுகிறது.
இருப்பினும், வருவாய் உறுதிப்பாடும் பங்குதாரர் மதிப்பை உயர்த்தும் திறனும் கொண்ட நிறுவனங்களில் இன்னும் நல்ல வாய்ப்புகள் இருப்பதாக ஈஸ்ட்ஸ்பிரிங் இன்வெஸ்ட்மென்ட்ஸ் தெரிவிக்கிறது.


