தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிரம்ப்பின் வரிநிறுத்த அறிவிப்பால்சிங்கப்பூர் பங்குச் சந்தை புத்தெழுச்சி

2 mins read
1e53e75b-87bc-4fe4-8da6-4a282f403cd2
சிங்கப்பூர் பங்குச் சந்தை. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வரிவிதிப்பை 90 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து சிங்கப்பூர் பங்குச் சந்தை வியாழக்கிழமை (ஏப்ரல் 10) புத்தெழுச்சி பெற்றது.

காலையில் சந்தை வர்த்தகம் ஏற்றத்தில் தொடங்கியது. எஸ்டிஐ (STI) குறியீடு 8.2 விழுக்காடு என்னும் உச்சத்தைத் தொட்டு காலை 10.15 மணியளவில் 5.5 விழுக்காட்டுக்கு இறங்கியது. வர்த்தக நேர முடிவில் 5.4 விழுக்காடாகி, 3,577.83 புள்ளியில் நிறைவடைந்தது.

ஆக அதிகமாக சேட்ஸ் (SATS) நிறுவனப் பங்குகள் 9.8 விழுக்காடு உயர்ந்து, ஒரு பங்கின் விலை $2.70 என்ற விலையில் வர்த்தகம் ஆனது.

விமானச் சரக்கு தொடர்பான இந்தப் பங்குதான் டிரம்ப்பின் வரிவிதிப்பு அறிவிப்புக்குப் பிறகு அதிகமாக அடி வாங்கியது. உலக வர்த்தகர்கள் தங்களது விநியோகத் தொடரையும் தளவாட வசதிகளையும் வரிவிதிப்பின் தாக்கத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கும் நிலை ஏற்பட்டதன் காரணமாக அந்தப் பங்கு தொடர்ந்து சரிந்துகொண்டே இருந்தது.

வியாழக்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியதும் உள்ளூர் வங்கிகளான டிபிஎஸ், யுஓபி, ஓசிபிசி ஆகியவற்றின் விலைகள் சராசரியாக 9 விழுக்காடு ஏற்றம் கண்டன.

அதேபோல, எஸ்டி என்ஜினியரிங் பங்கின் விலை 6.64 விழுக்காடு உயர்ந்து $6.69 ஆனது.

ஏப்ரல் 2ஆம் தேதி டிரம்ப் புதிய வரிவிதிப்பை அறிவித்தது முதல் சரிவைச் சந்தித்து வந்த எஸ்டிஐ குடியீடு (STI) புதன்கிழமை (ஏப்ரல் 9) வர்த்தகம் முடியும் வரை 14.2 விழுக்காடு சரிவடைந்ததைக் காணமுடிந்தது.

சிங்கப்பூரைப் போலவே பெரும்பாலான ஆசியச் சந்தைகளிலும் ஏற்றம் பதிவானது.

ஜப்பானின் நிக்கேய் குறியீடு 8.3 விழுக்காடும் தைவானின் தைஎக்ஸ் (TAIEX) 9.3 விழுக்காடும் உயர்ந்தன.

தென்கொரியாவின் கோஸ்பி (Kospi) குறியீடு 5.2 விழுக்காடு, ஆஸ்திரேலியாவின் ஏஎஸ்எக்ஸ் 200 (ASX 200) 4.7 விழுக்காடு என விண்ணை நோக்கிப் பறந்தன.

சீனாவுக்கான வரியை டிரம்ப் அதிகரித்தபோதிலும் சீனாவின் ஷங்காய் கம்போசைட் குறியீடு 1.6 விழுக்காடு ஏற்றம் கண்டது. அதேபோல, ஹாங்காங்கின் ஹாங்செங் குறியீடும் 4.3 விழுக்காடு அதிகரித்தது.

குறிப்புச் சொற்கள்