இவ்வாண்டின் தொடக்கத்திலேயே சிங்கப்பூரின் பங்குச் சந்தை துடிப்புடன் செயல்பட்டது.
ஜனவரி 3ஆம் தேதி வெனிசுவேலா அதிபரான நிக்கலாஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான அரசியல் சூழ்நிலையில் சிங்கப்பூர் பங்குகள் ஏற்றம் கண்டன.
இதில் வங்கிகளின் பங்குகள் லாபமடைந்தன. ஜனவரி 7ஆம் தேதி டிபிஎஸ் குழுமத்தின் பங்குகள் இரண்டு வெள்ளிக்கு மேல் அதிகரித்து இதுவரை இல்லாத வகையில் $58க்கு மேல் உயர்ந்தது. வார இறுதிக்கு முன்பு அதன் மதிப்பு $57.60ஆக முடிவடைந்தது.
ஜனவரி 7ஆம் தேதி ஓசிபிசி வங்கியின் பங்கு விலையும் முதல்முறையாக 20 வெள்ளியைத் தாண்டி பின்னர் வார இறுதியில் 19.80 வெள்ளியில் முடிந்தது.
2026ஆம் ஆண்டில் வட்டி விகிதம் மேலும் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சிங்கப்பூர் வங்கிகளின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபகரமானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு ஐந்து விழுக்காட்டுக்கு அதிகமான ஈவுத்தொகை ஆதரவாக இருக்கும்.
இந்தத் தொகை மேலும் உயரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், தற்போதைய மதிப்பீட்டின்படி யுஓபி பங்குகள் தனித்து நிற்கின்றன. அதன் ஈவுத் தொகை, ஜனவரி 5ஆம் தேதி முடிவடைந்த 35.50 வெள்ளி அடிப்படையில் 5.8 விழுக்காடாக இருக்கும் என்று மார்னிங்ஸ்டார் ஆசிய பங்குகள் ஆய்வுப் பிரிவின் இயக்குநரான திருவாட்டி லோரைன் டான் குறிப்பிட்டுள்ளார்.
பங்கு விலையில் டிபிஎஸ், ஓசிபிசியைவிட பின்தங்கிய யுஓபி, வார இறுதியில் 36.02 வெள்ளியில் முடிந்தது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீட்டில் (STI) முக்கிய அங்கம் வகிக்கும் சிங்கப்பூர் வங்கிகள், கடந்த வாரம் குறியீட்டை 4,700 புள்ளிகளுக்கு மேல் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல உதவின. இந்நிலையில், இவ்வாண்டுக்குள் எஸ்டிஐ குறியீடு 5,000ஐ நோக்கிச் செல்லும் என்று பங்குச் சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

