உணவுப் பொருள் கையிருப்பைச் சிங்கப்பூர் உத்திபூர்வமாக நிர்வகிக்கிறது: அமைச்சர் சண்முகம்

உணவுப் பொருள் கையிருப்பைச் சிங்கப்பூர் உத்திபூர்வமாக நிர்வகிக்கிறது: அமைச்சர் சண்முகம்

2 mins read
உணவு, எரிபொருள் கையிருப்புத் தகவல் வெளியிடப்படாது என்றும் தெரிவித்தார்
67917333-d488-43b9-989d-a000b82afe67
கையிருப்பின் நிலை வெளியிடப்பட்டால், நெருக்கடி காலத்தில் அது சிங்கப்பூருக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளதாக அமைச்சர் சண்முகம் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் உணவுப் பொருள் கையிருப்பை உத்திபூர்வமாக நிர்வகிக்கிறது என்றும் அது எதிர்பாராத விநியோகத் தடைகளை எதிர்கொள்ள உதவும் என்றும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கா சண்முகம் கூறியுள்ளார்.

இதற்கிடையே, விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் வழிகளையும் ஆராய்ந்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் சண்முகம், மத்திய கிழக்கில் நிலவிவரும் பூசல்களால் சிங்கப்பூரில் ஏற்படும் தாக்‌கம் தொடர்பில் உள்நாட்டு நெருக்கடிநிலை குறித்த அமைச்சர்நிலைக் குழு கவனம் செலுத்தும் இரு அம்சங்கள் குறித்து விவரித்தார்.

எரிபொருள், உணவு ஆகிய இரண்டு அம்சங்களில் குழு கவனம் செலுத்தும் என்றும் தொடர்ந்து, மீள்திறன், பாதுகாப்பு மேம்பாடுகள், ஆதரவு முன்னெடுப்புகள், வெளியுறவுகள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தும் என்றும் அவர் சொன்னார்.

அத்தியாவசியப் பொருள் கையிருப்புகளை மட்டும் நிர்வகிக்க முடியும் என்றும் சில நாடுகளிலிருந்து வரும் உணவுப் பொருள்கள் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டால், மாற்றுப் பொருள்களுக்குச் சிங்கப்பூரர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

சிங்கப்பூரின் எரிசக்தி, உணவுக் கையிருப்புகள் குறித்துக் கேள்வி எழுவதாகக் கூறிய அவர் அத்தகவல் வெளியிடப்படாது என்றார்.

எரிசக்தித் தடையினால் உரங்களின் விலை அதிகரிக்கும்; அதனால் உணவுப்பொருள்களின் விலையும் அதிகரிக்கும் என்றார் அமைச்சர்.

போதுமான கையிருப்புகளும், அவசரகாலத் திட்டங்களும் தயாராக இருப்பதுதான் முக்கியம் என்று கூறிய அவர், அதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து வலுவாக இருப்பதை உறுதிசெய்ய வழக்கமான இடைவெளியில் மதிப்பாய்வு செய்து வலுப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 2ஆம் தேதியன்று, பிரதமர் லாரன்ஸ் வோங் உள்நாட்டு நெருக்கடிநிலை குறித்த அமைச்சர்நிலைக் குழு அதன் பணியைத் தொடங்கிவிட்டதாக அறிவித்திருந்தார்.

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் அது குறித்துப் பேசப்படுமென்று அமைச்சர் சண்முகம், செய்தியாளர் சந்திப்பின்போது கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்