சிங்கப்பூருக்கும் துருக்கிக்கும் இடையில் உள்ள நீண்டகால உறவை இருநாட்டுத் தலைவர்களும் மறுவுறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரதமர் லாரன்ஸ் வோங்கும் துருக்கி அதிபர் ரிசெப் தயீப் எர்துவானும் இஸ்தான்புல் நகரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) சந்தித்தனர்.
தொழில்துறைக்கும் மக்களுக்கும் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து தமக்கும் அதிபர் எர்துவானுக்கும் இடையே பயனுள்ள கலந்துரையாடல் இடம்பெற்றதாகப் பிரதமர் வோங் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
“விரைவாக மாறிவரும் புவிசார் அரசியல் சூழல் குறித்தும் நாங்கள் கலந்துரையாடினோம். விதிமுறைகள் சார்ந்த அனைத்துலக ஒழுங்கிற்கான கடப்பாட்டை மறுவுறுதிப்படுத்தினோம்,” என்றார் அவர்.
வணிகம், முதலீடு, போக்குவரத்து ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த துருக்கி - சிங்கப்பூர் தடையற்ற வணிக உடன்பாடு போன்ற உத்திபூர்வப் பங்காளித்துவத்தைக் கட்டியெழுப்புவது குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டது.
கூடுதலான உயர்நிலைச் சந்திப்புகள்வழி இருதரப்புக் கலந்துரையாடல்களை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்தும் ஆலோசித்த தலைவர்கள், ஆசியானுடனான உறவை வலுப்படுத்த துருக்கி கொண்டுள்ள எண்ணத்தை வரவேற்றதாகவும் அது குறிப்பிட்டது.
துருக்கியுடன் உள்ள நட்பு ஆழமானது என்று பிரதமர் வோங் குறிப்பிட்டுள்ளார்.
“துருக்கியுடனான அதிகாரபூர்வ அரசதந்திர உறவு 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டிருந்தாலும் வரலாற்றுத் தொடர்புகள் 1865ஆம் ஆண்டே தொடங்கிவிட்டன. ஆட்டோமன் பேரரசு அதன் முதல் தூதரகத்தைச் சிங்கப்பூரில் அப்போது நிறுவியது,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
ரஷ்யாவின் கஸான் நகரில் ஆசியான்-ரஷ்யா சிறப்பு உச்சநிலைச் சந்திப்பில் பங்கேற்ற திரு வோங், அங்கிருந்து இஸ்தான்புல் சென்றார்.

