சிங்கப்பூரின் செயின்ட் ஜோசஃப்ஸ் இன்ஸ்டிடியூஷன் (எஸ்ஜேஐ) அனைத்துலகப் பள்ளியைச் சேர்ந்த 15 வயது மாணவர் ஒருவர் பள்ளி வெளிநாட்டுப் பயணத்தின்போது மாலத்தீவில் உயிரிழந்துவிட்டார்.
சிங்கப்பூரரான ஜெனா சான் எனும் அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர், தேசிய இளையர் சாதனை விருது தொடர்பில் மாலத்தீவிற்குப் பயணம் மேற்கொண்டார் என்று எஸ்ஜேஐ பள்ளியின் தலைமை நிர்வாகி டாக்டர் மைக்கல் ஜான்ஸ்டன் சனிக்கிழமையன்று (நவம்பர் 9) தெரி[Ϟ]வித்தார்.
“இந்தத் துயரமான நேரத்தில் ஜெனாவின் குடும்பத்தார், நண்பர்கள், ஒட்டுமொத்தப் பள்ளிச் சமூகத்துக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.
ஜெனாவின் குடும்பத்தார் மாலத்தீவு தலைநகர் மாலேக்குப் புறப்பட்டுள்ளதாகவும் டாக்டர் ஜான்சன் சொன்னார். பள்ளி முதல்வரின் தலைமையிலான குழுவுடன் அவர்கள் மாலத்தீவு சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அக்குழு, ஜெனாவின் குடும்பம், மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் ஆகிய தரப்பினருக்கு உடனடி ஆதரவு வழங்கும் என்றும் டாக்டர் ஜான்சன் தெரிவித்தார். ஒருவரை இழப்பதால் ஏற்படும் துயரத்தைக் கையாள பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் ஆதரவு, மனநல ஆலோசனை ஆகியவை பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மாலத்தீவு அதிகாரிகள் விசாரணை நடத்திவரும் வேளை[Ϟ]யில் எங்களால் இப்போதைக்கு மேல்விவரங்கள் ஏதும் வழங்க முடியாது,” என்றும் டாக்டர் ஜான்சன் விளக்கினார்.
“இந்த சவாலான நேரத்தில் ஜெனாவின் குடும்பத்தார், நமது மாணவர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு ஆதரவு வழங்குவதற்கே நாங்கள் முன்னுரிமை வழங்குகிறோம்,” என்றார் அவர்.
மாணவரின் மரணம் குறித்து முதலில் உள்ளூர் ஊடகமான தி எடிஷன் (The Edition) வெள்ளிக்கிழமையன்று செய்தி வெளியிட்டது. ஸ்னோர்க்கலிங் (Snorkelling) எனப்படும் கடல் நீருக்குள் இருந்தபடி நீந்தும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தபோது 15 வயது மாணவர் ஒருவர் மீது ஓடிக்கொண்டிருந்த படகின் இயந்திர விசிறி (boat propeller) மோதியதாக தி எடிஷன் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
அச்சம்பவம் அலிஃப் தாலு அட்டோல் டிகுரா (Alif Dhaalu atoll Dhigurah) பகுதிக்கு அருகே நிகழ்ந்ததாகவும் தி எடிஷன் செய்தி வெளியிட்டது. மாண்ட மாணவர், ‘வேல் ஷார்க்’ வகை திமிங்கிலம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

