பெல்ஜியத்தில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சிங்கப்பூர் மாணவர்

2 mins read
91968b24-df78-4e5d-ad07-c80af56eb520
பிரசல்ஸ் நகரின் செயின்ட் பீட்டர்ஸ்ட்ராட் பகுதியிலிருந்து அதிகாலை 2.30 மணிக்கு உதவிகோரி காவல்துறை அழைக்கப்பட்டது. - படம்: கூகல் மேப்

பிரசல்ஸ்: பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்சில் 25 வயது சிங்கப்பூர் மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார்.

இச்சம்பவம் வியாழக்கிழமையன்று (நவம்பர் 7) பிரசல்ஸ் நகர மையத்தில் நிகழ்ந்தது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபின் அந்த இளையர் உயிரிழந்துவிட்டார் என்று பிரசல்ஸ் அரசாங்க வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

அந்நகரிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்ட்ராட் பகுதியிலிருந்து அதிகாலை 2.30 மணிக்கு உதவிகோரி காவல்துறை அழைக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில், 18 வயது இளையர்கள் இருவரை அடையாளம் கண்டு, காவல்துறை கைதுசெய்துள்ளது.

“அவ்விருவரும் அந்தச் சிங்கப்பூர் இளையரை அணுகியதாகவும் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அந்த இளையர் குத்தப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று காவல்துறைப் பேச்சாளர் யாஸ்மினா வனோவர்ஷெல்ட கூறினார்.

முதல்நாள் மாலையில் அந்தச் சிங்கப்பூர் இளையர், வேறு இரு மாணவர்களுடன் நகர மையத்தில் இருந்ததாகவும் அப்போது அவர்களை இருவர் துன்புறுத்தியதாகவும் ‘பிரஸ்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பின்னர் அம்மூவரும் செயின்ட் பீட்டர்ஸ்ட்ராட் பகுதிக்குச் சென்றனர்.

அங்கு சிங்கப்பூர் இளையர் மட்டும் தனியாக இருந்த நேரத்தில் அவரை அவ்விரு சந்தேகப் பேர்வழிகளும் அணுகினர். அவர்களில் ஒருவர் கத்தியை உருவியதாகச் சொல்லப்படுகிறது.

துணைமருத்துவப் படையினர் வரும்வரை காவல்துறை கத்தியால் குத்தப்பட்ட இளையருக்கு முதலுதவி அளித்தது.

சம்பவம் குறித்து பிரசல்ஸ் அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்தில் பணியிலிருந்த குற்றவியல் நடுவருக்குக் காவல்துறை தகவல் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, விசாரணை நடுவர் ஒருவரை அவர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக பிரசல்ஸ் அரசாங்க வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்தது.

கூடுதல் தகவல்களுக்காக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சையும் பிரசல்சில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகத்தையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தொடர்புகொண்டது.

குறிப்புச் சொற்கள்