வெளிநாட்டுப் பூசல்கள் சிங்கப்பூரர்களை ஒருபோதும் பிரிக்கக்கூடாது என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் மூண்டுள்ள அண்மைய மோதலைக் குறிப்பிட்டு பேசிய அவர், குடிமக்கள் ஒற்றுமையைக் கட்டிக்காக்கும்படி கேட்டுக்கொண்டார்.
“சிங்கப்பூரர்களான நாம் ஒற்றுமையாக இருந்து ஒருவரையொருவர் ஆதரித்து, இருதரப்பு மரியாதையையும் புரிந்துணர்வையும் கட்டிகாக்கவேண்டும்,” என்று இணைப் பேராசிரியர் ஃபைஷால் கூறினார்.
கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது பேசிய டாக்டர் ஃபைஷால், சிங்கப்பூரின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் மெத்தனமாக எண்ணிவிடக்கூடாது என்று வலியுறுத்தினார்.
இதற்கிடையே, மத்திய கிழக்கில் உள்ள சிங்கப்பூர் மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்பதைத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் டாக்டர் ஃபைஷால் பதிவிட்டார். மாணவர்களின் கல்வி பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஜோர்தான், எகிப்து, சவூதி அரேபியா, குவேத் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளில் 40க்கும் அதிகமான சிங்கப்பூர் மாணவர்கள் மேற்கல்வியைத் தொடர்ந்துவருகின்றனர். அவர்கள் சிலரிடம் பேசியதாக இணைப் பேராசிரியர் ஃபைஷால் குறிப்பிட்டார்.
“மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை அறிந்தது நிம்மதியடைகிறேன்,” என்று ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்ட டாக்டர் ஃபைஷால், மாணவர்களுடன் புதன்கிழமை உரையாடியதாக சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) குறிப்பிட்டதாகச் சொன்னார்.
குடும்பத்தாருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும்படியும் அதிகாரிகளுக்கு அவ்வப்போது தகவல் தரும்படியும் டாக்டர் ஃபைஷால் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
நாடு திரும்ப விரும்பும் சிங்கப்பூரர்களுக்கு உதவ சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கருத்தாய்வுகளையும் அனுப்பியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து திரும்ப விரும்பும் மாணவர்கள் உடனடியாக அந்தக் கருத்தாய்வு மூலம் தங்கள் விண்ணப்பத்தைத் தெரிவிக்கும்படியும் டாக்டர் ஃபைஷால் ஆலோசனை வழங்கினார்.
மாணவர்களின் நலனுக்குச் சிங்கப்பூர் முன்னுரிமை அளிக்கிறது என்றும் உதவி தேவைப்பட்டால் எப்போது வேண்டுமானாலும் செய்யத் தயார் இருப்பதாகவும் டாக்டர் ஃபைஷால் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு வட்டாரத்தில் உள்ள முயிஸ் மாணவர் தொடர்பு அதிகாரிகள், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் வெளிநாட்டுத் தூதரகங்களுடன் இணைந்து செயல்பட்டுவருகின்றனர்.
அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வழிகாட்ட முயிஸ் ஆயத்தமாக இருப்பதாகவும் சொன்னது.

