இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்துலக தேசிய மாணவர் படை (என்சிசி) பரிமாற்றத் திட்டம் ஜனவரி 15 முதல் 30 வரை புதுடெல்லியில் நடைபெற்றது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த முகாமில், இவ்வாண்டு இந்தியா உள்ளிட்ட 22 நாடுகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படைகளும் இளையர் அமைப்புகளும் கலந்துகொண்டன. சிங்கப்பூர் மாணவர் படையினரும் அவர்களோடு இணைந்தனர்.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பிற்கு இணங்க, சிங்கப்பூரின் ஒன்பது உயர்நிலைப் பள்ளிகளிலுள்ள தேசிய மாணவர் படையைச் சேர்ந்த 10 மாணவர்கள் டெல்லி சென்றனர். அவர்களில் மூவர் மாணவியர்.
சிங்கப்பூர் தேசிய மாணவர் படையின் தலைமையக அதிகாரிகள் லெப்டினெண்ட் கர்னல் முகம்மது நிஸார், மேஜர் (என்சிசி) லோ சூ ரின் ஆகியோர் அவர்களை வழிநடத்தினர்.
உட்லண்ட்ஸ் ரிங் உயர்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படைக்கு, அந்தப் படையின் இணைப்பாடப் பொறுப்பாசிரியரும் தமிழாசிரியருமான கேப்டன் (என்சிசி) வெ.ப. பெருமாள் தலைமை ஏற்று, மாணவர்களை டெல்லி முகாமுக்கு அழைத்துச் சென்றார்.
குதிரை சாகச நிகழ்ச்சி, இருநாட்டு கலாசாரப் பரிமாற்றம், நடனம், சிங்கப்பூர் அறிமுகம் ஆகிய நிகழ்ச்சிகளோடு சில சுற்றுப்பயணங்களையும் உள்ளடக்கியதாக முகாம் இருந்தது.
ஆக்ரா நகரில் தாஜ்மகால் மற்றும் முகாலயர் காலத்து கோட்டை, புதுடெல்லி அரும்பொருளகம், இந்தியப் பிரதமர் அலுவலக அரும்பொருளகம் ஆகியவற்றைச் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு சிங்கப்பூர் மாணவர்களுக்குக் கிடைத்தது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, ஆட்சி அமைப்பு மற்றும் முக்கிய நிகழ்வுகளின் வரலாறுகளை அந்த அரும்பொருளகங்களில் அவர்கள் கண்டனர்.
தொடர்ந்து, இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இரவு விருந்திலும் அதிபர் மாளிகையில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளிலும் தேநீர் விருந்திலும் மாணவர்கள் பங்கேற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
முகாமின் முத்தாய்ப்பாக, இந்தியாவின் 77ஆவது குடியரசுதினக் கொண்டாட்டங்களில் சிங்கப்பூர் மாணவர்கள் அங்கம் வகிக்கும் அனைத்துலகத் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்றது.
அதனை அடுத்து, இந்தியாவின் தேசிய மாணவர் படை தலைமை இயக்குநருடன் நம் மாணவர்கள் தேநீர் விருந்தில் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூர் மாணவர்கள் 22 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களது வரலாறு, சமூகம், பொருளியல், அவர்கள் பின்பற்றும் பண்பாடு ஆகியன பற்றி அறிந்து கொள்ளவும் அந்த மாணவர்களுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளவும் இந்த முகாம் உதவியது.
முக்கியமாக, இந்தியாவின் மாணவர்களுடன் சிங்கப்பூர் மாணவர்கள் இணைந்து பழகி, பண்பாடு, வரலாறு, கலைகள், கைவினைப்பொருள்கள், ராணுவச் சிறப்புகள், விருந்தோம்பல் பற்றி அறியக்கூடிய நல்வாய்ப்பாக முகாம் அமைந்தது. அத்துடன், நவீன உலகின் போக்குகளை மாணவர்கள் நன்கு அறிந்துகொள்ளவும் அது உதவியது.
இந்திய தேசிய மாணவர் படையினரால் நடத்தப்பட்ட குதிரை சாகச நிகழ்ச்சி நம் மாணவர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக அமைந்தது.
மேலும், குடியரசு தினக் கொண்டாட்டத்தில் இடம்பெற்ற ஒட்டகப் படைப்பிரிவின் அணிவகுப்பும் மோட்டார் சைக்கிள் சாகச அணிவகுப்பும் நம் மாணவர்களுக்கு உற்சாகமூட்டின.
இதுபோன்ற முகாம்கள் நம் மாணவர்கள் எதிர்கால நற்குடிமக்களாகச் சிறந்து விளங்கப் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.
உட்லண்ட்ஸ் ரிங் உயர்நிலைப் பள்ளியின் ‘என்சிசி கேப்டன்’ வெ.ப. பெருமாள், சிங்கப்பூர் தேசிய மாணவர் படையினரை இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்ட முகாமுக்கு அழைத்துச் சென்றது இது இரண்டாவது முறை.
ஏற்கெனவே 2024ஆம் ஆண்டிற்கான முகாமில் கலந்துகொள்ளவும் சிங்கப்பூர் தேசிய மாணவர் படையினரை திரு பெருமாள் புதுடெல்லிக்கு அழைத்துச் சென்றார்.
கல்வி, ஒழுக்கம், நற்பண்புகள், இணைப்பாடத்தில் மாணவர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றில் நன்கு சிறந்து விளங்கும் மாணவர்கள் இந்த முகாமுக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டதாக திரு பெருமாள், தமிழ் முரசிடம் கூறினார்.

