முதல் நிலையில் சிங்கப்பூர் மாணவர்கள்

2 mins read
2230dfbd-e055-4129-9a72-3e44374c028a
‘பிசா 2022’ல் கலந்துகொண்ட சிங்கப்பூர் மாணவர்கள் கணிதத்தில் தங்களது செயல்திறனைக் கட்டிக்காத்தனர்; அறிவியலில் கணிசமான அளவு மேம்பட்டுள்ளனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மாணவர்கள் எவ்வாறு தங்களது அறிவாற்றலையும் திறன்களையும் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதை அளவிடும் அனைத்துலக ஆய்வு ஒன்றில் இங்குள்ள 15 வயதுப் பிரிவினர் முன்னணி வகித்துள்ளனர்.

அனைத்துலகப் பள்ளிகள், மத்ராசா பள்ளிகள் உள்ளிட்ட 149 உயர்நிலைப் பள்ளிகளையும் 15 தனியார் பள்ளிகளையும் சேர்ந்த 6,606 மாணவர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு ‘பிசா’ எனப்படும் அனைத்துலக மாணவர் மதிப்பீட்டுக்கான திட்டம் 2022ல், கணிதம், அறிவியல், வாசிப்பு ஆகியவற்றில் சிங்கப்பூர் முதல் நிலையில் வந்தது.

பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டு அமைப்பு மூவாண்டுக்கு ஒருமுறை நடத்தும் இந்த ஆய்வு, கொவிட்-19 கிருமிப்பரவலால் ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டது.

இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டு கடைசியாக நடத்தப்பட்ட ‘பிசா’ ஆய்வில், சீனாவுக்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் இரண்டாம் நிலையில் வந்தது.

ஆக அண்மைய ஆய்வில் சீனா கலந்துகொள்ளவில்லை. ஆய்வு நடத்தப்பட்டபோது சீனப் பள்ளிகள் மூடியிருந்ததே அதற்குக் காரணம். 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பிசா 2022ல் கலந்துகொண்ட சிங்கப்பூர் மாணவர்கள் கணிதத்தில் தங்களது செயல்திறனைக் கட்டிக்காத்தனர்; அறிவியலில் கணிசமான அளவு மேம்பட்டுள்ளனர். இருப்பினும், வாசிப்பில் அவர்களின் மதிப்பெண்கள் சற்று குறைந்திருந்தன.

சிங்கப்பூர் மாணவர்களிடையே வாசிப்பில் காணப்பட்ட சரிவு, மற்ற பல நாடுகளில் உள்ள மாணவர்களின் வாசிப்புச் செயல்திறனைப் போலவே இருந்ததாகக் கல்வி அமைச்சு கூறியது. இது உலகளவில் வாசிப்புப் பழக்கத்தில் உள்ள மாற்றத்தின் தாக்கத்தைப் பிரதிபலிக்கக்கூடும் என்றது அமைச்சு.

ஆக அண்மைய பிசா ஆய்வு, நன்றாகச் செயல்பட்ட மாணவர்கள் சிங்கப்பூரில் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் இருப்பதையும் காட்டியது.

எடுத்துக்காட்டாக, வாசிப்பைப் பொறுத்தவரை சிங்கப்பூரில் 23% மாணவர்கள் முன்னணி வகித்தனர். கணிதத்திலும் அறிவியலிலும் முறையே 41 விழுக்காட்டு மாணவர்களும், 24 விழுக்காட்டு மாணவர்களும் முன்னணியில் இருந்தனர்.

‘அனைத்துலக வாசிப்பு எழுத்தறிவு ஆய்வில் மேம்பாடு’, அதாவது ‘பிர்ல்ஸ்’ எனும் மற்றோர் அனைத்துலக ஆய்வின் முடிவுகளோடு எடுக்கப்பட்ட பிசா 2022 முடிவுகள், நமது கல்விக் கட்டமைப்பின் மீள்திறனை மறுவுறுதிசெய்வதாக அமைச்சு, அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட ‘பிர்ல்ஸ்’ ஆய்வு முடிவுகளில், சிங்கப்பூரில் தொடக்கநிலை 4 மாணவர்கள் உலகின் முன்னணி வாசிப்பாளர்களாகத் திகழ்ந்தனர்.

இங்குள்ள ஆசிரியர்களுக்குக் கல்வி அமைச்சு புகழாரமும் சூட்டியது. கொவிட்-19 கிருமிப்பரவலின்போது மாணவர்களின் கற்றலிலும் நலனிலும் ஆதரவளிப்பதில் பள்ளிகள், ஆசிரியர்களின் முயற்சிகளை அந்த முடிவுகள் பிரதிபலிப்பதாக அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்