முன்வைக்கப்பட்ட 243 மனித உரிமைப் பரிந்துரைகளுக்குச் சிங்கப்பூர் ஆதரவு

முன்வைக்கப்பட்ட 243 மனித உரிமைப் பரிந்துரைகளுக்குச் சிங்கப்பூர் ஆதரவு

படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

29 Sep 2026 - 2:40 pm

2 mins read

சிங்கப்பூர் தனது மனித உரிமைச் சாதனைகள் குறித்த அண்மைய ஆய்வின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் குழந்தைகளுக்கு மனநல ஆதரவை மேம்படுத்தவும் பிற ஐக்கிய நாட்டு உறுப்பு நாடுகளால் வழங்கப்பட்ட 243 பரிந்துரைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கான சிங்கப்பூரின் நிரந்தரப் பிரதிநிதி திரு ஜெயரத்தினம், இந்நடவடிக்கையை ஒரு வெளிப்படையான கலந்துரையாடலுக்கான தளமாகச் சிங்கப்பூர் கருதுவதாகவும் திறந்த மனதுடன் அணுகுவதாகவும் கூறினார்.

கல்வி, பொதுச் சுகாதாரப் பராமரிப்பு, குறைந்த வருவானக் குடும்பங்களுக்கான உதவி, வெளிநாட்டு ஊழியர்கள் நலன், ஊழியர் உரிமைகள் மற்றும் மின்னிலக்க உள்ளடக்கம் உள்ளிட்ட அம்சங்களில் அனைவரையும் உள்ளடக்கிய, பிணைப்புமிக்க, மீள்திறன் கொண்ட சமுதாயத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் துணைபுரியும் பரிந்துரைகளுக்குச் சிங்கப்பூர் ஆதரவளித்துள்ளதாகத் திரு ஜெயரத்தினம் மேலும் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் அணுகுமுறை நடைமுறைச் சாத்தியம், சட்டம் ஆகிய இரண்டு தூண்களை அடிப்படையாகக் கொண்டது என்று கூறிய அவர்.

ஒவ்வொரு நாட்டின் சூழ்நிலைகளுக்கேற்ப மனித உரிமைகளை முன்னெடுத்துச் செல்ல வெவ்வேறு வழிகளைப் பின்பற்றும் என்று திரு ஜெயரத்தினம் தெரிவித்தார்.

“மக்கள் அடையும் அர்த்தமுள்ள முன்னேற்றமே இங்கு முக்கியமானது,” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூர் ஆதரவளித்த குறிப்பிட்ட பரிந்துரைகளில், வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வுநேரத்தை கட்டாயமாக்குதல் மற்றும் மின்னிலக்க அடிப்படையில் ஆட்களைச் சேர்த்தல், சம்பளம் வழங்கும் முறைகளை உருவாக்குதல் தொடர்பாக பிரிட்டன் முன்வைத்த பரிந்துரையும் அடங்கும்.

வேலை செய்யும் சூழல், சுகாதாரப் பராமரிப்பு, சமூகப் பாதுகாப்பு, நீதி தொடர்பான சேவைகள் எளிதில் கிடைப்பது, நியாயமற்ற வகையில் நடத்தப்படுவதற்கு எதிரான பாதுகாப்பு போன்ற துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளுக்கும் சிங்கப்பூர் ஆதரவு அளித்தது.

வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கான சட்டப் பாதுகாப்புகள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் மனநல ஆதரவு உள்ளிட்ட மேம்படுத்துவதும் இதில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்
வெளிநாட்டு ஊழியர்மனித உரிமைபரிந்துரை