இளையர்களுக்கு ஆஸ்திரேலியா விதித்துள்ள சமூக ஊடகத் தடை குறித்து அதனுடன் சிங்கப்பூர் கலந்து பேசி வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இளையர்களைப் பாதுகாக்கும் பொருட்டு சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவதற்கான வயது வரம்பை சட்டப்படியாக்க ஆஸ்திரேலியா முயன்று வருகிறது.
அதேபோன்ற நோக்கங்களுடன் ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் பேசி வரும் சிங்கப்பூர் சமூக ஊடகத் தளங்களையும் ஆராய்ந்து வருகிறது.
சரியான புரிதலை எற்படுத்தும் நோக்கத்துடன் அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் மற்றும் மின்னிலக்க மேம்பாட்டு துணை அமைச்சர் ரஹயு மஹ்ஸம் தெரிவித்து உள்ளார்.
16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் நலன் கருதி அவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த இயலாத வகையில் ஆஸ்திரேலியா கடந்த ஆண்டு தடை விதித்தது.
இணையத் துன்புறுத்தல் தொடர்பான கடுமையான பாதுகாப்பு நடவடிக்கையாக அது கருதப்படுகிறது.
ஆஸ்திரேலியா விதித்துள்ள தடை இவ்வாண்டு மார்ச் மாதம் சட்ட வடிவில் நடப்புக்கு வருகிறது. இருப்பினும், அது தனது சட்டத்தை எவ்வாறு செயல்படுத்த உள்ளது என்ற விவரம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவைப் போலவே சிங்கப்பூரில் உள்ள குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரும் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படுமா என்று எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களில் ஒருவரான வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி உறுப்பினர் திருவாட்டி ஃபூ மீ ஹார், இணையத் தீங்குகளில் இருந்து இளையர்களைப் பாதுகாக்க விதிக்கப்படும் தடை குறித்த அரசாங்கத்தின் மதிப்பீடு என்ன என்று கேட்டிருந்தார்.
அந்தக் கேள்விக்குப் பதிலளித்த திருவாட்டி ரஹயு, “சமூக ஊடகத் தளப் பயன்பாட்டுக்குரிய வயது வரம்பை நிர்ணயிப்பதற்கான நோக்கம் அதன் தீங்குகளில் இருந்து குழந்தைகளையும் இளையர்களையும் பாதுகாப்பதற்கானது,” என்றார்.
மேலும், “ஆஸ்திரேலியாவைப் போன்ற நோக்கத்தை நாமும் கொண்டுள்ளோம். அதனை அந்த நாட்டுடன் பகிர்ந்துள்ளோம். வயது வரம்பை கட்டாயமாக்குவதன் ஆற்றல் குறித்து தொடர்ந்து ஆராய்வோம்,” என்றார் திருவாட்டி ரஹயு.
தடைக்கான பரிசீலனை குறித்துப் பேசிய அவர், இளையர்களின் தடைமீறலில் உள்ள கடுமையை அதிகாரிகள் எவ்வாறு மதிப்பிடுவர் என்பது உள்ளிட்ட காரணிகள் கவனமாக ஆராயப்பட வேண்டி உள்ளது என்றார்.